எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வரிசையில் நின்ற தனியார் பேருந்தை கடத்திய குற்றச்சாட்டில் 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம, கலவிலவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திருடப்பட்ட சிறிது நேரத்திலேயே பஸ்ஸுடன் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

138 ஹோமாகம - பேட்டா பஸ் பாதையில் பயணிக்கும் தனியார் பஸ்ஸே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் நிரப்பிய வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை திடீரென இயக்கி ஒருவர் அழைத்துச் செல்வதைக் கண்டுள்ளார்.

பேருந்தின் உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து, அவர் வந்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்துவிட்டு பேருந்தைத் தேடி முச்சக்கர வண்டியில் பேருந்தை நோக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பஸ் ஹோமாகமவில் உள்ள டன்சல் ஒன்றில் நின்றிருந்த நிலையில், பஸ்ஸின் சாரதி வயது குறைந்தவர் என்பதை அங்கிருந்த ஒருவர் அவதானித்து அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளதா என கேட்டுள்ளார்.

இதற்கிடையில், பேருந்தின் உரிமையாளர் பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதுடன், பேருந்தையும் சந்தேகநபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.