இலங்கை

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து செயற்படும் இலங்கையர்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் ரஷ்யாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம் ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இது தொடர்பில் எழுத்து மூலக் கோரிக்கையொன்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்துள்ளது.

குறித்த கடிதத்தில் இலங்கையில் இருந்து ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்ள வருகை தந்துள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் விபரங்கள், மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் என்பவற்றை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை இராணுவத்தின் முன்னாள் சிப்பாய்களை ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று ரஷ்ய - உக்ரைன் மோதலில் ஈடுபடுத்தும் மோசடி செயற்பாடுகள் தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ரஷ்யாவிடம் மேற்குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.