நியூசிலாந்து ஆரஞ்சு நிற போக்குவரத்து விளக்கு அமைப்பில் தொடர்ந்து இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி இரவு 11.59 மணி முதல் நியூசிலாந்து ஆரஞ்சு எச்சரிக்கை நிலையில் உள்ளது.

ஒரு அறிக்கையில், கொவிட்-19 பதிலளிப்பு அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ், போக்குவரத்து விளக்கு அமைப்பு தொடர்பான மறுபரிசீலனை ஜூன் மாத இறுதியில் நடைபெறும் என்று கூறினார்.

ஆனால் இப்போதைக்கு, ஆரஞ்சு அமைப்பு பொருத்தமானது என அவர் தெரிவித்தார்.

தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை எண்ணிக்கை தேசிய அளவில் குறைந்தாலும், அவை மீண்டும் வடக்கு பிராந்தியத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன, மேலும் கடந்த மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கும் விகிதங்களும் சற்று அதிகரித்துள்ளன என்று அவர் கூறினார்.

மேலும் தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது மிகவும் சீராக இருந்தாலும் குளிர்காலம் நெருங்கி வருவதால் சளி மற்றும் காய்ச்சலின் புதிய விகாரங்களின் வருகை ஏற்கனவே அலுவலாக இருக்கும் மருத்துவமனைகளின் பணிச்சுமையை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

அனைவரையும் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கவும், மற்றவர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன், குறிப்பாக நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெறவில்லை என்றால் , தயவுசெய்து பூஸ்டரை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல், தடுப்பூசி போடுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற பொது சுகாதார நடவடிக்கைகள் கொவிட்-19 க்கு எதிரான முக்கிய பாதுகாப்புகளாக தொடர்ந்து அமுலில் இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

ஆரஞ்சு அமைப்பில் விமானங்கள், படகுகள் மற்றும் பயணிகள் முனையங்கள், பொது போக்குவரத்து மற்றும் டாக்சிகள், பல்பொருள் அங்காடிகள், பொது இடங்கள், சுகாதார மற்றும் கால்நடை மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் கட்டிடங்கள் உள்ளிட்ட  இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.