Dunedin இல் ஆபரேஷன் ரூபஸ் நடவடிக்கையின் கீழ் காவல்துறையும் சுங்கமும் இணைந்து செயல்பட்டதை அடுத்து இரண்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், போதைப்பொருள்கள், ஸ்டன் துப்பாக்கிகள் மற்றும் பணம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே 67 வயதுடைய ஒரு Dunedin நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மீது, சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாகவும், மூன்று தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகவும், செல்போனுக்கு கடவுக்குறியீட்டை வழங்கத் தவறியமை மற்றும் உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

Dunedin மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டார். அவர் மீண்டும் மார்ச் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விநியோகம் எங்கள் சமூகங்களில் உள்ள குடும்பங்களில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று துப்பறியும் மூத்த சார்ஜென்ட் நிக் லீ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து காவல்துறையினரால் குறிவைக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்