இந்தியா: தமிழ்நாடு

தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது.

தென்காசி மாவட்டம் சிவகிரிஅருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் வெளிமாநிலங்களில் இருந்து 440 கிலோ குட்கா கடத்திவந்ததாக திமுகவைச் சேர்ந்த தென்காசி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் போஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் குட்கா நடமாட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி சட்டப்பேரவைக்கே குட்காவை எடுத்துச் சென்று குற்றம்சாட்டிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது முதல்வரான பின் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையைதடுக்கவோ, ஒழிக்கவோ எந்தநடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடங்கி தமிழகத்தில் அடிக்கடி பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் திமுக நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதன் மூலம் ஆளுங்கட்சியின் ஆதரவுடனே இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

எனவே, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.