உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சக்திவாய்ந்த வெளிநாடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

 

“இந்தத் தாக்குதல் இடம்பெற்ற சில தினங்களில் அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் இலங்கை வந்திருந்தார்கள்” எனவும் குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி, “சஹ்ரானின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் என்பதை இந்த புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்க முடியவில்லை” எனவும் சுட்டிக்காட்டினார்.

 

“இந்த அமைப்பின் தலைவராக சஹ்ரான் இருந்திருப்பார் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் ஒரு அமைப்பின் தலைவர் தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் ஈடுபடமாட்டார்” எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்று மீண்டும் சாட்சியமளித்த போதே மைத்திரிபால சிறிசேன இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

 

“உங்களுடைய ஆட்சிக் காலத்தில் புலனாய்வுப் பிரிவினர் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், இந்தக் குண்டுத் தாக்குதல் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது எவ்வாறு நடைபெற்றது?” என ஆணையாளர் முன்னாள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார்.

 

இதற்குப் பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, “இராணுவ, புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டமையால் தமது கடமைகளை அவர்களால் உரிய முறையில் செய்ய முடியவில்லை” எனத் தெரிவித்தார்.