அமீர்கான் நடித்த 'லால்சிங் சத்தா' படம் படுதோல்வி அடைந்தது. இதனால் சினிமாவை விட்டு விலகி இருக்கப்போவதாக சமீபத்தில் அறிவித்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு முதல் தடவையாக அவர் அளித்துள்ள பேட்டியில் சிறுவயதில் ஏற்பட்ட பண கஷ்டங்களை பகிர்ந்தார்

இந்நிலையில் அமீர்கான் கூறும்போது...

''அந்த நாட்கள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எனது தந்தை தாகிர் உசேன் 'ஸ ராக்கெட்' என்ற படத்தை தயாரித்தார். அதில் ஹீரோ, ஹீரோயின் ஆக ஜிதேந்திரா நடிகை ரேகா மற்றும் காதர் கான் போன்ற பெரும் நடிகர்களை ஒப்பந்தம் செய்தார். என் தந்தை பிரபல தயாரிப்பாளர் இல்லை என்பதால் அவர்கள் சரியாக கால்ஷீட் கொடுக்காமல் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. அந்தப் படம் முடிய எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. அந்த சமயத்தில் எங்கள் குடும்ப நிலை மோசமானது. சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டோம். வீட்டை விட்டு தெருவிற்கு வந்து விட்டோம். படம் எடுக்க கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்தனர். அவர்களிடம் என் அப்பா கெஞ்சுவார். அப்போது நான் பத்து வயது சிறுவன். அதனால்தான் நடிக்க வந்த பிறகு தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் இருக்கிறேன்" என்றார். இவ்வாறு அவர் கூறும்போது கண்ணீர் விட்டு அழுதார்.