மத்திய வெலிங்டனில் நேற்றையதினம் இரசாயனக் கசிவு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் வீடுகளில் இருந்து சுமார் 50 பேர் வரை வெளியேற்றப்பட்டனர்.

Salamanca சாலை மற்றும் Kelburn Parade சந்திப்பைச் சுற்றியுள்ள பகுதியில் இந்த இரசாயன கசிவு ஏற்பட்டது குறித்து அவசர சேவைகளுக்கு இரவு 9 மணிக்கு முன்னதாக தகவல் வழங்கப்பட்டது.

கடுமையான இரசாயன மணம் மற்றும் புகை மண்டலம் சாலையில் உள்ள ஒரு இடத்தில் காணப்பட்டது, மேலும் குடியிருப்பாளர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் இருமல் ஏற்பட்டதால் அந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

ஏறக்குறைய 200 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் இரவு 10.45 மணியளவில் சுற்றிவளைக்கப்பட்ட  பகுதி திறக்கப்பட்டது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் இப்போது வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிசார் இதனை வாயு கசிவு என கூறிய போதிலும், என்ன பொருள் என அடையாளம் காணப்படவில்லை. மக்கள் அப்பகுதியைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 111 க்கு அழைக்கவும்.

செய்தி நிருபர் - புகழ்