மேற்கு ஆக்லாந்தில் உள்ள இந்து கோவிலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 21 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் ஆக்லாந்தின் Henderson என்ற இடத்தில், Brick தெருவில் உள்ள ஸ்ரீ ராம் மந்திர் கோவிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் வெளியான சிசிடிவி காட்சிகளில் முகமூடி அணிந்த இரு நபர்கள் கோயிலுக்குள் நுழைந்து எரிபொருளைக் கொண்டு தரையில் தீ வைப்பதைக் காட்டுகிறது.

ஸ்ரீ ராம் மந்திர் கோவில் செய்தித் தொடர்பாளர் பிரவின் குமார் 1 நியூஸிடம் கூறுகையில், இரண்டு குற்றவாளிகளும் கோயிலின் சாப்பாட்டு அறையின் பின்புற நுழைவாயில் வழியாக நுழைந்தனர்.

பின்னர் தரையில் ஒருவித எரிபொருளை ஊற்றி தீ வைத்தனர் என அவர் கூறினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை அணைத்து, என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

"இதை யார் செய்ய விரும்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நல்ல காரியங்களைச் செய்வதை வெறுக்கும் ஒருவராக இருக்கலாம்." என அவர் தெரிவித்தார்.

தீ விபத்தால் சமூகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், மீண்டும் இது போன்று நடக்குமோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கட்டத்தில், எங்கள் விசாரணைகள் தொடர்கின்றன, யாரும் கைது செய்யப்படவில்லை என்று ஒரு பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன் வருமாறு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.