இந்த பூமியில் தன் பக்தர்களுக்கு அருள் புரிவதற்காகவே  ஶ்ரீவைகுண்டத்தில் இருந்து  தாயார் ஶ்ரீ மஹாலக்ஷ்மியுடன்  திருமலைக்கு வந்து ஸ்வாமி ஶ்ரீமந் நாராயணன் புஷ்கரிணியில் ஆனந்தமாக  விளையாடிக்கொண்டு இருக்கிறார் என புராணங்கள் கூறுகின்றன.

ஶ்ரீநிவாசனும், அலர்மேல்மங்கைத் தாயாரும்  பக்தர்களிடம் இருந்து கைங்கர்யத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் நியூசிலாந்தில்  வசிக்கக்கூடிய பக்தர்களுக்காக ஶ்ரீநிவாசனும், தாயாரும்   நியுசிலாந்திலேயே நிரந்தரமாக இருந்து அருள வேண்டும்.

அங்கு திருக்கல்யாணம் செய்துகொண்டு எல்லோருக்கும் ஆனந்தத்தைக் கொடுக்க வேண்டும்  என்று நினைத்து விட்டார்கள்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் முதலாக டன்னீடனில் ஶ்ரீநிவாசருக்கும் பத்மாவதிதாயாருக்கும் திருக்கல்யாண வைபவம்‌ வெகு விமர்சையாக "பக்தி மார்கம்  நியூசிலாந்தால்" கொண்டாடப்பட்டது.

இந்த வைபவத்தில் எல்லோரும் குடும்பத்துடன் வந்து இறைவனின் திரு அருளைப் பெற்றனர்.

சாஸ்திர பூர்வமாக முறைப்படி திருக்கல்யாண வைபவத்தை மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.

அலங்காரங்களும் ,ப்ரசாதங்களும், வேத பாராயணங்களும், இசை நிகழ்ச்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு  பெருமாள் தாயாருக்கு  மேன்மையை அளித்தன.

திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தவர்களும், கண்டு களித்தவர்களும்,மற்றும் அங்கு வந்திருந்த எல்லோருக்கும் சுகமும்,சௌக்யமும், ஆரோக்யமும், சந்ததி அபிவிருத்தியும், அஷ்ட ஐச்வர்யமும், சாந்தமும், குடும்ப ஒற்றுமையும், மற்றும் சகல சௌபாக்யங்களும்  வளர வேண்டும் என்பதற்காகவே  பக்தர்களின் இஷ்டங்களை பத்மாவதி தாயாரும் ஶ்ரீநிவாசரும் பூர்த்தி செய்கிறார்கள்.