சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளை அளவுக்கதிகமாக உட்கொண்டதன் காரணமாக 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சட்டவிரோத போதைப்பொருள் அல்லது ஏனைய பொருட்களைப் பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறையினர் மக்களை வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பில் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் மால்கம் இங்லிஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...

செப்டம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கிறிஸ்ட்சர்ச்சில் இடம்பெற்ற 20 வயது இளைஞனின் திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகக் கூறினார்.

மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன, ஆனால் ஆரம்பகட்ட விசாரணைகளில் அறிகுறிகள் மரணம் ஒரு போதைப்பொருளின் அளவுடன் தொடர்புடையது என தெரியவந்தது.

இச் சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டு, B வகை போதைப்பொருளை விநியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இருவரும் நாளை கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குயின்ஸ்டவுனில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஸ்னோ மெஷின் இசை விழா நடைபெறவுள்ள நிலையில் போதைப்பொருள் பாவனையாளர்கள் இவ்வாறான ஆபத்தை தவிர்ப்பதற்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இங்லிஸ் கூறினார்.

"எந்தவொரு ஆபத்தையும் தடுக்க மக்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம், சட்டவிரோத மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதுதான்"

"மக்கள் தீவிர கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறார்கள்" என்று இங்கிலிஸ் கூறினார்.

சட்டவிரோதமான பொருளை உட்கொண்ட பிறகு, அந்த பொருள் பற்றி அல்லது மோசமான விளைவுகளை சந்திக்கும் எவரும், நியூசிலாந்தின் போதைப்பொருள் முன்னெச்சரிக்கை அமைப்பான ஹை அலர்ட்டுக்கு புகாரளிக்குமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.