நியூசிலாந்தில், தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை திரையிட முதலில் அனுமதி அளித்த நியூசிலாந்து திரைப்பட தணிக்கை குழு, சில முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பை தொடர்ந்து, தணிக்கையை மறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்கு நியூசிலாந்து முன்னாள் துணை பிரதமர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் தி காஷ்மீர் பைல்ஸ் என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி உள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த பண்டிட் சமூகத்தினர் 1990களில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், நாடு முழுதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது.இத்திரைப்படத்தை நியூசிலாந்து நாட்டில் திரையிடுவதற்காக நியூசிலாந்து திரைப்பட தணிக்கை குழு சமீபத்தில் தணிக்கை செய்தது.

16 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திரைப்படத்தை காண, தணிக்கை சான்று அளிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, திரைப்படத்தை மறு ஆய்வு செய்ய தணிக்கை குழு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, தி காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு அளிக்கப்பட்ட தணிக்கை சான்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு, நியூசிலாந்து முன்னாள் துணை பிரதமர் வின்ட்சன் பீட்டர்ஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது...

பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அவை அம்பலப்படுத்தப்பட்டு, எதிர்க்கப்பட வேண்டும். நியூசிலாந்து தணிக்கை குழுவின் இந்த நடவடிக்கை, நியூசிலாந்து மக்கள் மற்றும் உலகில் உள்ள அனைத்து மக்களின் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக அமையும்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

100 கோடி பேர், இந்த திரைப்படத்தை பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 32 ஆண்டுகள் கடந்த பின்னும், லட்சக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அகதிகளாக வசிக்கின்றனர். இந்த திரைப்படத்தை திரையிட நியூசிலாந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.