வார இறுதியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை ஏமாற்றமளிப்பதாக டன்னீடன் காவல்துறை கூறுகிறது.

டன்னீடன் காவல்துறை மூத்த சார்ஜென்ட் அந்தோனி பாண்ட், வார இறுதி நாட்களில் கவனயீனமாக வாகனம் ஓட்டியவர்கள் பலர் இருப்பதாக கூறினார்.

வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், போதையில் வாகனம் ஓட்டியவர் வாகனத்தில் இருந்து பீர் கேன்களை வீசியதாக பொலிஸாருக்கு புகார்கள் கிடைத்தன.

குறித்த வாகனம் தப்பிச்சென்ற நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில மணிநேரங்களுக்குப் பிறகு‌ Portsmouth Dr இல் பொலிஸார் சாலையோரத்தில் நின்ற போது ஒரு ​​வாகனம் மின்கம்பத்தில் மோதியதை பார்த்தனர்.

வாகனம் ஓட்டிய 28 வயது நபர் "போதையில்" இருந்ததாகவும், 982mcg ஆல்கஹாலுடன் வாகனம் ஓட்டியது மூச்சுக்குழாய் பரிசோதனையில் கண்டறியப்பட்டதாகவும் பாண்ட் கூறினார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சாரதி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்‌‌ என அவர் தெரிவித்தார்.

அதே இரவு 1.20 மணியளவில், வடக்கு டன்னீடனில் உள்ள மெக்டொனால்ட்ஸ் அருகே ஒரு நபர் 600mgc அளவு ஆல்கஹாலுடன் வாகனம் ஓட்டியதை அடுத்து கைது செய்யப்பட்டார்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் கேபிள்வேஸில் மது அருந்திக் கொண்டிருந்த ஒரு பெண், Kaikorai Valley சாலையில் உள்ள ஒரு வீட்டில் தனது காரை மோதியுள்ளார்.

குறித்த வீட்டில் காயங்கள் அல்லது சேதம் எதுவும் இல்லை ஆனால் பெண்ணின் கார் பலத்த சேதமடைந்தது.

பின்னர் மூச்சுக்குழாய் பரிசோதனையில் அந்த பெண் 1237mcg ஆல்கஹாலுடன் வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணின் வாகன ஓட்டுநர் உரிமம் 28 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டதுடன் அவர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Harington Point Rd இல் ஒழுங்கற்ற முறையில் வாகனம் ஓட்டியதாகக் கிடைத்த புகாரின் பேரில், 20 வயது இளைஞரும் அதிகப்படியான மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் வார இறுதியில் பலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது ஏமாற்றம் அளிப்பதாக பாண்ட் கூறினார்.

இந்த செய்தி முதலில் ஒடாகோ டெய்லி டைம்ஸில் வெளிவந்தது.