பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொவிட் தொற்று இல்லை என பரிசோதனைகளின் முடிவில் தெரியவந்துள்ளது.

ஜனவரி 22 அன்று கெரிகேரியில் இருந்து ஆக்லாந்திற்குச் சென்ற விமானத்தில் பயணித்த கொவிட் தொற்றாளரின் நெருங்கிய தொடர்பு எனக் கருதப்பட்ட பின்னர் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனிமைப்படுத்தப்பட்டார்.

மேலும் கவர்னர் ஜெனரல் டேம் சின்டி கிரோ மற்றும் அவருடன் விமானத்தில் இருந்த பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கும் எதிர்மறையான முடிவுகள் வந்துள்ளன.

ஆர்டெர்ன் மற்றும் டேம் சிண்டி கிரோ ஆகியோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, PCR சோதனைகளை மேற்கொண்டனர்.

பிரதமர் ஆர்டெர்னின் செய்தித் தொடர்பாளர், சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, செவ்வாய்க்கிழமை இறுதி வரை அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவார் என்று கூறினார்.

மேலும் துணைப் பிரதமர் கிராண்ட் ராபர்ட்சன் பிரதமர் சார்பாக அமைச்சரவைக்குப் பிந்தைய ஊடக மாநாட்டில் கலந்து கொள்வார் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகம் நேற்றைய தினம் அவர் நன்றாக இருப்பதாகவும் எந்த அறிகுறிகளும் இல்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விமானத்தில் இருந்த கொவிட் தொற்றாளரின் முழு மரபணு பரிசோதனை முடிவுகள் இன்று எதிர்பார்க்கப்படுகிறது.