இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை நைட் கிளப்பில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். கொரோனா விதிகளை மீறி கிளப்பில் கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மும்பை விமான நிலையம் அருகே உள்ள கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா, குரு ரந்தாவா, பாலிவுட் நடிகர் சூசன் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த விடுதியில் கொரோனா விதிகளை மீறியதாகக் கூறி ஏழு கிளப் ஊழியர்கள் உள்பட 34 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சாஹர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனைவரும் பின்னர் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பணியில் இருந்த அரசு ஊழியருடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது, ஆபத்தை விளைவிக்கும் தொற்றுப்பரவல் வழிகாட்டுதல்களை அலட்சியப்படுத்தி பொது இடத்தில் கூடியது உள்ளிட்ட இந்திய தண்டனைச்சட்டம், பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதிவரை எவ்வித பொது நிகழ்ச்சிகளையும் நடத்த அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா திரிபு அறிகுறி காரணமாக உலகின் பல நாடுகள் அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ள நிலையில், வர்த்தக தலைநகரான மும்பையில் கடுமையான கட்டுப்பாடுகளை அங்குள்ள அம்மாநில அரசும் மாநகராட்சியும் விதித்துள்ளன.