இலங்கை

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) மீதான தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு உலக கால்பந்தாட்ட நிறுவனமான FIFA தீர்மானித்துள்ளது.

FIFA வின் அறிக்கையின்படி, FIFA கவுன்சிலின் பணியகத்தால், இலங்கை கால்பந்து சம்மேளம் அனுமதியை நீக்குவதற்கு விதிக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை விளையாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை விளையாட்டு அமைச்சின் சிறந்த பதிலை கருத்திற்கொண்டு நேற்று முன்தினம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 29ஆம் திகதி நடைபெறும் என இந்நாட்டு விளையாட்டு அதிகாரிகள் உறுதியளித்துள்ள நிலையில், அதுவரை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தொடர்பில் அவதானித்து வருவதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் விடுத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.