கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி அன்று தெற்கு ஆக்லாந்தில் உள்ள Manurewa வில் சூட்கேஸ்களில் இரண்டு குழந்தைகளின் எச்சங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கொலை விசாரணையில் கடந்த வருடம் செப்டம்பர் 15‌ ஆம் திகதி தென் கொரியாவின் உல்சான் என்ற இடத்தில் குழந்தைகளின் தாயாக கருதப்படும் 42 வயதான பெண் தென்கொரிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

இதனையடுத்து அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு நியூசிலாந்து அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையை அடுத்து தென் கொரிய நீதிமன்றம் குறித்த பெண்ணை நியூசிலாந்திற்கு நாடு கடத்தியது.

இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதாக இன்று நீதிமன்றத்தில் சவால் விடுத்துள்ளார்.

குறித்த பெண் இன்று ஆக்லாந்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் கண்களை மூடிக்கொண்டு தலை குனிந்து நின்றார்.

பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​அவரது கையை உயர்த்தி நீதிபதி கிரஹாம் லாங்கை அழைத்தார். அழைத்து "நான் அதைச் செய்யவில்லை. அது உண்மை. நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கப் போகிறேன்." என உரக்க கூறினார்.

ஆனால் அதற்கு நீதிபதி லாங் பதிலளிக்கவில்லை.

இந்த பெண் தென் கொரியாவுக்கு செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, குழந்தைகளின் தந்தை 2017 இல் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர் இறக்கும் போது குழந்தைகள் ஐந்து மற்றும் எட்டு வயதுடையவர்களாக இருந்தனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.