இரண்டு வெவ்வேறு துணிக்கடைகளில் இருந்து கிட்டத்தட்ட 10,000 டொலர்கள் மதிப்புள்ள பொருட்களை திருடியதாக முன்னாள் பசுமைக் கட்சி எம்பி கோல்ரிஸ் கஹ்ராமன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கஹ்ராமன் வியாழன் அன்று ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

கடையில் திருடியதாக மூன்று குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள், அவர் திருடியதாக கூறப்படும் பொருட்களின் மதிப்பைக் காட்டுகின்றன.

இதன்படி அக்டோபர் 22 அன்று வெலிங்டனின் Cre8iveworx கடையில் இருந்து 695 டொலர்கள் மதிப்புள்ள ஆடைகளைத் திருடியதாக கஹ்ராமன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன.

பின்னர் டிசம்பர் 21 அன்று Ponsonby இல் உள்ள Scotties Boutique இல் 7223 டொலர்கள் மதிப்புள்ள ஆடைகளையும், மறுநாள் அதே கடையில் 2060 டொலர்கள் மதிப்பிலான 
ஆடைகளை திருடியதற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இதனிடையே திருட்டு குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து கஹ்ராமன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

கஹ்ராமன் பெப்ரவரி 28 ஆம் திகதி அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

செய்தி நிருபர் - புகழ்