ஆக்லாந்தின் புறநகர் பகுதியான Onehunga வில் நேற்று இரவு Dairy Shop ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு 8.40 மணியளவில் Mt Smart வீதியில் உள்ள குறித்த Dairy Shop இல் ஐந்து பேர் கத்தியுடன் நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து காவல் துறையினர் கடைக்கு அழைக்கப்பட்டனர்.

ஆக்லாந்து நகர மாவட்ட CIB இன் டிடெக்டிவ் மூத்த சார்ஜென்ட் ஸ்காட் ஆம்ஸ்ட்ராங் கூறுகையில், கடையில் ஒரு ஊழியர் இருந்ததாகவும் ஆனால் அவர் காயமடையவில்லை, சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தார் என்று அவர் தெரிவித்தார்.

கடைக்குள் நுழைந்த குற்றவாளிகள் பல பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து வாகனத்தில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று நள்ளிரவு (21) 12.25 மணியளவில், Onehunga வில் உள்ள Oranga Avenue வை சுற்றி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வாகனத்தை கண்டனர்.

இதனையடுத்து வாகனம் பொலிஸாரிடம் இருந்து சிறிது தூரம் தப்பிச் சென்றது, பின்னர் அந்த வாகனத்தின் ஓட்டுநர் பொலீஸில் சரணடைந்தார் என ஆம்ஸ்ட்ராங் கூறினார்.

அந்த வாகனத்துடன் இணைந்து பயணித்த மற்றொரு வாகனத்தை ஹெலிகாப்டர் பின்தொடர்ந்ததை அடுத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மோசமான கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 14-16 வயதுடைய மூன்று பேர் இன்று ஆக்லாந்து இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேலும் இருவர் இளைஞர் உதவி சேவைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்