நியூசிலாந்தின் ஆக்லாந்து மற்றும் பிற பிராந்தியங்களில் வாழ்ந்த தமிழர்களை முறையாக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியூசிலாந்து தமிழ்ச் சங்கம் (NZTS) 1982 இல் நிறுவப்பட்டது.

நியூசிலாந்து தமிழ்ச் சங்கம் ஆக்லாந்து பிராந்தியத்திலும் நியூசிலாந்து புறநகர்ப் பகுதிகளில் பரவியுள்ள தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இன்றளவும் செயற்பட்டு வருகிறது.

மேலும் தமிழ் மொழியையும் அதன் கலாச்சார விழுமியங்களையும் இளைய தலைமுறையினரிடம் மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தமிழ் மொழி கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாட்டுகளை மேம்படுத்துதல், நியூசிலாந்தில் உள்ள தமிழ் சமூகம் மற்றும் பிற சமூகங்களுக்கு இடையே மேம்பட்ட உறவை வளர்த்தல், தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான மனிதாபிமான காரணங்களுக்காக ஒற்றுமையை வெளிப்படுத்தல் மற்றும் ஆதரவளித்தல், மற்றும் எந்தவொரு சமூகத்திற்கும் அல்லது நிவாரண நிறுவனத்திற்கும் உதவுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இச்சங்கம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நியூசிலாந்து தமிழ்ச் சங்கம் தனது பயணத்தை ஆரம்பித்து 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் ஆண்டு நிறைவு விழா ஆக்லாந்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

இயல் இசை நாடகம் என தமிழர் கலாச்சாரத்தை அரங்கேற்ற வரும் இந்த விழாவில் கலந்து கொள்ள அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்