லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் தனது கடைசி போட்டியில் விளையாடிய சுவிட்சர்லாந்தின் வீரர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்.

லண்டனில் லேவர் கோப்பை டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது.

இதில் ஐரோப்பா, உலக அணிகள் மோதுகின்றன.

ஐரோப்பா அணி சார்பில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

உலக அணிக்காக ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், அர்ஜென்டினாவின் ஸ்வார்ட்ஸ்மேன், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், டாமி பால், ஜாக் சோக் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.

இப்போட்டிக்கு பின்‌ டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறவுள்ள பெடரர்‌ மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள இவர் கடைசியாக கடந்த ஆண்டு விம்பிள்டனில் விளையாடினார்.

அதன்பின்‌ முழங்கால் காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்டதால் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், தனது கடைசி போட்டியில் இரட்டையர் பிரிவில் பெடரர், ஸ்பெயினின் நடாலுடன் இணைந்து விளையாடினார்.

இந்த ஜோடி, அமெரிக்காவின் ஜாக் சோக், பிரான்சஸ் தியாபோ ஜோடியை எதிர்கொண்டது.

இதில் 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில், பெடரர் - நடால் இணை தோல்வி கண்டது.

தோல்விக்குப்பின், கண்ணீருடன் ரசிகர்களிடமிருந்து பெடரர் விடை பெற்றார்.

பெடரர் கூறுகையில், ‛அற்புதமான நாள் இது. நான் வருத்தமடையவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறேன். இங்கே இன்று கடைசியாக அனைத்தையும் செய்து மகிழ்ந்தேன்' என்றார்.