சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற தொழிலதிபர் ரான் பிரையர்லிக்கு 14 மாத சிறைத்தண்டனை மற்றும் ஏழு மாத பரோல் இல்லாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட பிரையர்லி இன்று சிட்னி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி சாரா ஹக்கெட் முன்நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவர் குறித்த குற்றவாளிக்கு  தண்டனையை வழங்கினார்.

முன்னர் நியூசிலாந்தின் மிக வெற்றிகரமான தொழிலதிபர்களில் ஒருவரான பிரையர்லி சிட்னி விமான நிலையத்தில் டிசம்பர் 2019 இல் கைது செய்யப்பட்டபோது, ​​அவரது லேப்டாப் மற்றும் USB டிரைவ்களில் ஆயிரக்கணக்கான இளம் பெண்களின் சட்டவிரோத படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த புகைபடங்களில் உள்ள சில பெண்கள் நான்கு வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

அன்றைய தினம் அவரது வீட்டை சோதனை செய்த போலீசார் மேலும் பல மின்னணு சாதனங்களை கண்டுபிடித்தனர்.விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட படங்களுடன், 46,000 க்கும் மேற்பட்ட படங்கள் குழந்தைகள் துஷ்பிரயோகம் என வகைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது குறித்த குற்றவாளி நபருக்கு 14 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.