சமீபத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து ஆக்லாந்து செல்லும் விமானங்களில் பயணித்த சக பயணிக ஒருவருக்கு மம்ப்ஸ் நோய் (Mumps) இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அந்த விமானங்களில் பயணித்த பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பில் ஹெல்த் நியூசிலாந்து - டெ வாட்டு ஓரா கூறுகையில், மார்ச் 22 அன்று பயணி ஒருவருக்கு Mumps நோய் இருப்பது கண்டறியப்பட்டது, இப்போது அவர் குணமடைந்துள்ளார், ஆனால் அவர் பயணம் செய்யும் போது தொற்று ஏற்படக்கூடும் என்று கூறினார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ0529 இல் குறித்த பயணி சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு மார்ச் 13 அன்று இரவு 11.15 மணிக்கு (IST) புறப்பட்டு அதிகாலை 5.28 மணிக்கு (GMT+08) சிங்கப்பூரை வந்தடைந்ததாக சுகாதார நிறுவனம் கூறியது.

பின்னர் அவர்கள் சிங்கப்பூரில் இருந்து ஆக்லாந்திற்கு மார்ச் 14 அன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ0281 இல் மாற்றப்பட்டு, காலை 8.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு ஆக்லாந்தை வந்தடைந்தார்.

எனவே குறித்த விமானங்களில் இருந்த எவரும் நோய் அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், வீட்டிலேயே தங்கி, அவர்களின் சுகாதார வழங்குநரைத் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது ஆலோசனை மற்றும் ஆதரவுக்கு ஹெல்த்லைன் 0800 611 116 என்ற எண்ணில் அழைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய பொது சுகாதார சேவையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் சூசன் ஜாக் கூறுகையில், Mumps நோய் ஒரு வைரஸால் ஏற்படுகிறது, இது மக்களிடையே மிக எளிதாக பரவுகிறது.

காய்ச்சல், தலைவலி மற்றும் சோர்வு போன்றவை Mumps இன் ஆரம்ப அறிகுறிகள். கன்னத்திலும் தாடையிலும் வலி, வீக்கம் மற்றும் மற்ற அறிகுறிகள் சில நாட்களுக்குப் பிறகு உருவாகிறது என அவர் தெரிவித்தார்.

பேசுவது, சுவாசிப்பது, இருமல் மற்றும் தும்மல் மூலம் இந்த நோய் பரவுகிறது. இது உமிழ்நீர் வழியாகவும் பரவுகிறது, உதாரணமாக முத்தமிடுதல் அல்லது உணவு மற்றும் பானங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் என அவர் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்