பாகிஸ்தானில் எரிந்து வரும் காட்டு தீயின் நடுவில் டிக்டாக் செய்து வலைதளத்தில் பதிவிட்ட பெண் மாடல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாகிஸ்தானில் வெப்பம் 100 டிகிரியையும் தாண்டி நிலவி வருகிறது. மிகவும் அதிகமான வெப்பத்தால் மக்கள் தெருக்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கும் சூழல் நிலவுகிறது.

காடுகளிலும் காட்டுத் தீ பரவத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல சமூக வலைதள நட்சத்திரமும், மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஹுமைரா அஸ்கர் (Humaira Asghar) என்ற மாடல் அழகி, எரியும் காடுகளுக்கு முன்னால் போஸ் கொடுத்து காணொளி ஒன்றை எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார். 

மேலும் அந்த பதிவில் "நான் எங்கிருந்தாலும் நெருப்பு வெடிக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த காணொளி பதிவிட்ட சில மணி நேரத்தில் வைரல் ஆகிவிட்டது.

இவரது இந்த காணொளி பாக்கிஸ்தான் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

மேலும் இணையதளத்தில்  அவர் குறித்து கடுமையான விமர்சனங்களை பலர் வெளியிட்டு வருகின்றனர். 

இது குறித்து பதிவிட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலரும், இஸ்லாமாபாத் வனவிலங்கு மேலாண்மை வாரியத்தின் தலைவருமான ரினா சயீத் கான், "அவர் இவ்வாறு போஸ் கொடுத்து வீடியோ எடுத்ததற்கு பதில் ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து தீயின் மீது உற்றி தீயை அணைக்க முயன்றிருக்கலாம்" என கூறி பதிவிட்டுள்ளார்.

மேலும் சிலர் ஹுமைரா தான் வீடியோவிற்காக காட்டுக்கு தீ வைத்திருப்பார் எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பின்னர் பலரின் தீவிர விமர்சனங்களுக்கு பிறகு பதிலளித்த ஹுமைரா தனது குழுவின் அறிக்கையில், தான் நெருப்பை மூட்டவில்லை என்றும், "வீடியோக்களை உருவாக்குவது தீங்கு விளைவிக்காது" என்றும் கூறினார்.

சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானின், வடமேற்கு அபத்தாபாத் நகரத்தில் காணொளி தயாரிப்புக்காக பின்னால் இருக்கும் செடிகளை ஒரு இளைஞர் தீ வைத்து எரியவிட்டதாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.