இந்தியா, மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் விமான நிலையங்களில் இருந்து விமானங்களை கடத்தி பாகிஸ்தானுக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்திய 34 வயதுடைய நபர் கைது  செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் அந்த செய்தியில்,

போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலைய அதிகாரிகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது.

இந்த அழைப்பில் அழைப்பாளர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக போபாலின் காந்திநகர் காவல் நிலைய பொறுப்பாளர் அருண் சர்மா பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் விமான நிலைய நிர்வாகம் காந்திநகர் பொலிஸாரிடம் இது குறித்து முறைப்பாடு அளித்தது. அதையடுத்து விமானங்களை கடத்திச் செல்வதாக அச்சுறுத்தியதாகக் கூறப்படும் அந்த நபர், போபாலில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள சுஜல்பூர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டார்.

மேலும் ,இந் நிலையில் கைதான நபரிடம் இது தொடர்பான பூரண விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அருண் சர்மா பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் உறுதிபடுத்தியுள்ளார்.

இதேவேளை அச்சுறுத்தல் அழைப்பைத் தொடர்ந்து போபால் விமான நிலையத்தில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளதாக மேலும் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.