"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்" என்று பேச்சுக் கலையை  சிறப்பித்த வள்ளுவரும்,  "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாய்மை பொருந்திய தமிழ் பேச்சின் பக்கம் நின்று பேசிய நக்கீரரும் ", "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே" என்று மிகத்  திண்ணமாக தமிழ்ப் பேச்சின் மேன்மையைச் சொல்லிய பாரதியும், ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும்" என்பதை நன்குணர்ந்த தமிழ் கூறும் நல்லுலகின் வெவ்வேறு படிநிலைகள்.

தமிழ்ச் சமூகம் எந்த விடயத்தையும் தர்க்க ரீதியாக அணுகி அதில் வெளிப்படும் செறிவான கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் ஒரு செம்மையான பணியினை பன்னெடுங்காலமாய்ச் பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் செய்து வருகிறது. இவ்வகையில் தமிழர் வாழ்வியலில் ஆகச் சிறந்த அங்கமாக பட்டிமன்றங்கள் நிலை பெற்றுள்ளது. இப்படிப்பட்ட அறிவார்ந்த பட்டிமன்ற மரபு அமெரிக்க மண்ணிலும் வேரூன்றி தழைக்கவிருக்கிறது.

வட அமெரிக்காவில் முதன்முறையாக தமிழர்களின் பட்டிமன்ற மரபினை நிறுவும் வகையில் *"நக்கீரர் பட்டிமன்றக் குழு"* என்னும் அமைப்பைத் தொடங்கி நடத்தவுள்ளோம். ஆர்ப்பரிக்கும் பசிபிக் அலைகள், தங்க நிற மணற்துகள்களை மட்டுமல்ல காவிரி ஆற்றின் கரையில் வாழ்ந்த மருத நில மாந்தர்களின் இலக்கியத்தையும் இனி மகிழ்வோடு உரக்கப் பேசும். வீசும் மேலையில் இனி குறிஞ்சி யாழின் இனிமையும் கலந்து ஒலிக்கும். கலிஃபோர்னிய மண்ணில் சிந்தும் தமிழ் அமுதம் வான் அலைகளின் ஊடே பரவி வட அமெரிக்க நிலமெங்கும் மகிழ்ச்சி பெருக்கும்.

நமது இந்த விழா பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா போன்ற பட்டிமன்ற பெரும் ஆளுமைகளின் வாழ்த்துகளுடனும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சிறப்பு விருந்தினர்களுடனும் நடக்கவிருக்கிறது, வட அமெரிக்கத் தமிழர்கள் அனைவரும் இணைந்து இந்த நிகழ்வினை எங்களோடு கொண்டாட வாருங்கள்.

நக்கீரர் பட்டிமன்றக் குழுவின் *தொடக்க விழா ஏப்ரல் 27,2024 அன்று மாலை 5:00 மணி அளவில் பிரீமோன்ட்டில் உள்ள மலோனி தொடக்கப் பள்ளியில்* நடக்கவிருக்கிறது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழுள்ள கூகிள் படிவத்தை நிரப்பி (RSVP)விரைவாக எங்களுக்கு அனுப்பவும். விழாவினைச் சீரிய முறையில் திட்டமிட இது எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தமிழால் இணைவோம். இணைந்தே இன்னும் உயர் சாதனைகள் புரிவோம்.

https://youtu.be/ieIqSUr8-W8?feature=shared

*RSVP* *அனுமதி இலவசம்*

https://forms.gle/vHMT73nGyK5ubSjk9

செய்திக் குறிப்பிலிருந்து நமது நிருபர் ஷீலா ரமணன்