இந்தியா: தமிழ்நாடு

அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா சுபிட்சமாக இருக்க வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம். 10 ஆண்டுகள் நரேந்திர மோடி பிரதமராக பல நலதிட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

இந்தியாவின் பெருமையை வளர்ந்த நாடுகளுக்கு மோடி எடுத்துச் சென்றுள்ளார். 3-வது முறையாக மோடி பிரதமராக வர வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். ஏற்கெனவே பாஜக கூட்டணியில் தான் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்காக மட்டும்தான் இரட்டை இலை சின்னம் பழனிசாமி தரப்புக்கு வழங்கப்பட்டது. அதுவும் நாங்கள் வழக்கை வாபஸ் பெற்றதால் அவர்களுக்கு கிடைத்தது. அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. 1989-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தொகுதி அது.

அதில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோற்ற நிலையில், பழனிசாமியை மக்கள் ஏற்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. மக்களவை தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம். விரைவில் விருப்பமனு பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.