இந்தியா: தமிழ்நாடு

தேமுதிகவின் 24-ம் ஆண்டு கொடி நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. கட்சியின் தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் நுழைய 4 வழிகள் மட்டுமே தற்போது உள்ளன.

அதன்படி அதிமுக, திமுக, பாஜக கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது. அல்லது தனித்து போட்டியிடுவது. அதன்படி கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனித்து போட்டியிடலாம் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் 2014-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது போல 14 சீட்டுகள் கொடுத்து மரியாதையுடன் வழி நடத்துபவர்களுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

இது கட்சி தலைமையின் கருத்தோ, என்னுடைய கருத்தோ கிடையாது. மாவட்ட செயலாளர்களின் கருத்து மட்டுமே. அடுத்தக்கட்ட ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு செய்யப்பட்டு, கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இது தேர்தல் அரசியல்.

இதில் மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் கூட்டணிக்கு திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தலைமை ஏற்று இருக்கின்றனர். இக்கட்சிகள் தான் கூட்டணி பேச்சை முதலில் தொடங்க வேண்டும். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரும் போது, தேமுதிகவின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தேமுதிகவுக்கும் ராஜ்யசபா சீட்டு கேட்க உரிமை இருக்கிறது. ஆனால் இதுவரை தேர்தலுக்கான அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.