இந்தியாவில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. தோல் தயாரிப்புகள், மின்னனு பொருட்கள் உள்ளிட்ட இந்திய பொருட்களை அமெரிக்கா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

'சிறப்பு வர்த்தக நாடு' என அங்கிகாரம் கொடுத்து குறைவான வரிகளை இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கிறது. பொதுவாக, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு கூடுதல் வரி விதிக்கும். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இருந்தபோது இந்த விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 200 சதவீதம் வரை அதிகம் வரி வசூலிப்பதாக கூறி இந்திய வரி விதிப்பு முறையை கடுமையாக சாடினார்.

இருநாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதி வரி வேறுபாட்டால் அமெரிக்கா பாதிக்கப்படுகிறது எனக்கூறி சிறப்பு வர்த்தக சலுகைகளை நிறுத்தபோவதாக அச்சுறுத்தினார். இதனால் அப்போது பரபரப்பு கிளம்பியது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில இந்தியாவுக்கான தனது பொருளாதார நிலைப்பாடு மாறவில்லை என்பதை வெளிப்படுத்தினார்.

'வரிவசூல் ராஜா' என இந்திய நாட்டை சாடிய அவர் அமெரிக்கா நாட்டின் மதுபானங்கள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், செல்போன்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கான வரிவிதிப்பு குறித்து பேசினார்‌

"பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அமெரிக்க பொருட்களுக்கு நியாயமான வரி விதிக்கப்படுவது இல்லை" எனக்கூறும் அவர் "தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரிவிதிக்கப்படும்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் "அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிவிதிப்பு செய்யப்பட்டால் நாமும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வரிவிதிக்க வேண்டும். அது பழிவாங்கல் என சொல்லப்பட்டாலும் சரி" என்றார்.