அதிமுக மாநில மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நடத்தும் முதல் பிரம்மாண்ட கூட்டம் இது என்பதால் தமிழக அரசியலிலும் இந்த மாநில மாநாடு முக்கியத்துவம் பெற்றது.

லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து இருந்த நிலையில், காலை முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ரோபோ சங்கர், மதுரை முத்து, ராஜலட்சுமி - செந்தில் உள்ளிடோர் பங்கேற்றனர்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு " புரட்சிதமிழர்" என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சர்வ சமய பெரியோர்கள் இந்த பட்டத்தை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்ததாக அதிமுக நிர்வாகி வைகை செல்வன் அறிவித்தார்.

மேடையிலேயே புரட்சி தமிழர் என வைகை செல்வன் மூன்று முறை உச்சரித்தார். மேலும் இந்த பட்டத்திலேயே இனி அதிமுகவினர் அழைக்க வேண்டும் என்று வைகை செல்வன் கோரிக்கை விடுத்தார். எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்று பட்டம் கொடுக்கப்பட்ட நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமிக்கு துரோக தமிழர் என்ற பட்டம் தான் சரியாக இருக்கும் என்று பேசினார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து டிடிவி தினகரன் கூறியதாவது...

துரோக தமிழர் என்று பட்டம் கொடுத்திருக்கலாம். துரோகத்துக்கு எடுத்துக்காட்டான தமிழர் என்ற பட்டம் வேண்டும் என்றால் அவருக்கு கொடுத்திருக்கலாம். அவர் என்ன புரட்சி செய்தார்.

காலில் விழுந்து பதவி வாங்கிவிட்டு பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் செய்தவர் தான் பழனிசாமி. தன்னை ஆட்சியில் தொடர்ந்து நீட்டிக்க வைத்த ஓ பன்னீர் செல்வத்திற்கும் துரோகம் செய்தவர்தான் அவர். துரோகத்தாலும், பண பலத்தாலும், கட்சியை கபளீகரம் செய்து வைத்தவர் தான் அவர். அதற்கு தான் அவர் புரட்சி செய்துள்ளார். இது வெட்கக்கேடானது.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.