அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை காண கனடாவில் இருந்து கடந்த 16ம் திகதி கடலுக்குள் மினி நீர்மூழ்கி கப்பல் சென்றது. நீர் மூழ்கி கப்பலானது கடலின் ஆழத்தில் சென்ற போது சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து கனடா, அமெரிக்க கடலோர காவல்படையினர் மாயமான நீர்மூழ்கி கப்பலை , விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். நீர்மூழ்கி கப்பலில் கொண்டு செல்லப்பட்ட ஆக்சிஜன் தீர்ந்து விடும் என்பதால் அதில் பயணம் செய்த 5 பேரையும் உயிருடன் மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கடியில் சுமார் 1600 அடி ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நீர்மூழ்கி கப்பல் வெடித்துச்சிதறியதாகவும் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழந்ததாகவும் அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15ம் திகதி  வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ் பாறை ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கப்பலில் விழுந்த துளை காரணமாக மொத்தமாக கப்பலும் மூழ்கியது. 52,310 டன் எடை கொண்ட இந்த கப்பல் நியூயார்க் செல்லும் வழியில் கடலுக்குள் மூழ்கி மொத்தமாக அழிந்தது.

இந்த விபத்தில் மொத்தம் 1,504 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். மனித வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான கப்பல் விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். சர்வதேச அளவில் கடல் பயணத்தையே மாற்றியதுதான் டைட்டானிக் விபத்து.

இதனால் 111 வருடங்கள் கழித்தும் டைட்டானிக் கப்பல்தான் இப்படி காவு வாங்குகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.