இந்தியா: தமிழ்நாடு

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு இப்போது கொண்டாடப்படுகிறது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

கருணாநிதியின் 100ஆவது பிறந்த நாளை ஓராண்டு முழுக்க கொண்டாட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி மாநிலம் முழுக்க கருணாநிதியின் சாதனைகளைப் போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

அதன்படி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூர் திமுக கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். அங்கே பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா மோ அன்பரசன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பேசிய தா மோ அன்பரசன், பெரியார், அண்ணா உள்ளிட்ட மாபெரும் தலைவர்களை எல்லாம் கொச்சைப்படுத்தும் வகையில் சீமான் ஆவேசமாகப் பேசி வருகிறார். இதை ஏற்க முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. வெறுமனே பொதுக்கூட்டங்களில் ஒருவர் ஆவேசமாகப் பேசுவதால் மட்டுமே மக்களிடம் செல்வாக்கு பெற்று தலைவராக மாறிவிட முடியாது.

இந்த ஆவேச நாடக பேச்சுகளையும் மூளச்சலவை செய்யும் வகையிலான வீடியோக்களையும் தான் இப்போது இளைஞர்கள் அதிகம் தங்கள் மொபைலை வைத்துப் பார்த்து வருகிறார்கள். இது ரொம்பவே ஆபத்தான போக்கு. இதற்கு இளைஞர்கள் எப்போதும் அடிமையாகக் கூடாது. அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கருணாநிதியின் பேச்சைக் கேளுங்கள். அவரது வரலாற்றைப் படியுங்கள்.

அப்போது தான் அவர் தமிழர்களும் இளைஞர்களுக்கும் என்ன செய்தார் என்பது தெரிய வரும். கருணாநிதி இளைஞர்களுக்கு அந்தளவுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்துள்ளார். அதைப் படித்தாலே உங்களுக்குப் புரியும் என்று அவர் தெரிவித்தார்.