இந்தியா: தமிழ்நாடு

திமுக இளைஞர் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட போது, சினிமாவில் நடிக்கும் இவர் கட்சி பணிகளுக்கு சரிபட்டு வருவாரா என பல சீனியர் நிர்வாகிகள் தங்களுக்குள் விவாதம் நடத்தினர். ஆனால் அவர்களின் மனக்கணக்குகளை எல்லாம் தவிடு பொடியாக்கி திமுக இளைஞரணியில் லட்சக்கணக்கில் புதிய இளைஞர்களை சேர்த்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சினார்.

உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை இயல்பாகவே கூச்ச சுபாவம் உடையவர். ஆனால் அப்படிபட்ட நபர் தன்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பு கொடுத்திருப்பதை உணர்ந்து பொது இடங்களில் பேசும் திறனை வளர்த்துக்கொண்டார். நகைச்சுவை ததும்ப மேடையில் பேசுவது கருணாநிதியின் பாணி. அதனை கணக்கச்சிதமாக பின்பற்றத் தொடங்கினார் உதயநிதி.

உதயநிதி ஸ்டாலினை அவரது ரசிகர் மன்றத்தினரும், இளைஞரணியினரும் ஆர்வக்கோளாறில் சின்னவர் என்ற அடைமொழியில் ஆரம்பத்தில் அழைக்கத் தொடங்கினர். ஆனால் தனக்கு எந்த அடைமொழியும் வேண்டாம் என்றும், பட்டப்பெயர்களை தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியிருந்ததால் சில மாதங்கள் அப்படி அழைக்கப்படாமல் இருந்தார்.

தற்போது மீண்டும் உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்ற அடைமொழியுடன் கட்சியினர் அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது அவருக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியிருக்கிறது. இதனால் தான் மயிலாடுதுறை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தன்னை சின்னவர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என ஒரு அன்புக்கட்டளை போட்டுள்ளார்.