இந்தியா: தமிழ்நாடு

கடந்த 2011-16 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரும் எழுந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்குப்பதிந்து ஆதாரங்களைத் திரட்டியது.

ஜூன் 13ஆம் திகதி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத் துறை அன்று இரவே அவரைக் கைது செய்தது.

அதைத்தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 8 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.

செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் முதலில் அனுமதி மறுத்த நிலையில், மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. அதோடு இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இதனை கண்டித்து இன்றைய தினம் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் ஜூன் 21ஆம் திகதி இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் முதலியவற்றை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் ஆர்பாட்டம் நடத்தப்படும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்