இந்தியா: தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே இரும்புலியூரில் நேற்று பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்தும் ஆட்சியை, முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். திமுகவினர் அடித்த கொள்ளையை பார்த்து, காங்கிரஸ் கட்சியினரே பயந்து விட்டனர். அதனால் தான், 2009ல் மத்திய அமைச்சரவையில், டி.ஆர்.பாலுவுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

கேசிஆர் அவ்வப்போது பல்வேறு இடங்களுக்குச் சென்று, பிரதமர் மோடிக்கு எதிராக கூட்டணியை உருவாக்குகிறேன் என்று ஊரெல்லாம் சுற்றுகிறார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் ஊரெல்லாம் சுற்றி தலைவர்களைச் சந்திக்கிறார். ஏன் ஸ்டாலின் வந்தால் யாரும் வர மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டால், அவர்கள் தமிழ் மொழியை தவிர எதுவும் பேசமாட்டேன் என்கிறார்கள், எங்களுக்கு புரியவில்லை என்கிறார்கள்.

தமிழை வைத்து அரசியல் வியாபாரம் செய்ததே திமுகவுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது. மொழி அரசியல் தான் திமுகவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இந்திய அளவில் திமுகவை ஏற்றுக்கொள்வதற்கு யாரும் தயாராக இல்லை. எங்களுடன் கூட்டணி வைக்கிறார்கள், அதேநேரத்தில் பீகாரிகள் பான் பராக் போடத்தான் லாயக்கு என்கிறார்கள் என பீகார் தலைவர்கள் சொல்கிறார்கள்.

பீகாரில் பிறந்த ஆளுநரை தமிழ்நாட்டு மண்ணில் திமுகவினர் கேவலமாகப் பேசுகிறார்கள் என்று பீகார் நாளிதழ்களில் எழுதுகிறார்கள்.

அப்படி இருக்கும்போது நிதிஷ் குமார் எப்படி தமிழ்நாட்டுக்கு வருவார்? திமுகவை பார்த்தாலே, அகில இந்திய தலைவர்கள் பயந்து ஓடுகிறார்கள். முதல்வர் ஸ்டாலினை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

திருவாரூரில் நேற்று கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் உடல் நலக்குறைவால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அதனைக் குறிப்பிட்டு அண்ணாமலை இவ்வாறு பேசியுள்ளார்.