இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது முதல் பயணத்தின் போது, ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் ஏப்ரல் 15, 1912 இல் பனிப்பாறையில் மோதி வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

கப்பலில் இருந்த 2,224 பேரில் 1,500க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது.

1985 ஆம் ஆண்டு கடலில் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, டைட்டானிக் கப்பலைச் சுற்றி பல ஆய்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அட்லாண்டிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென மாயமாகி விட்டதாக அமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் ஐந்து பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

நியூ பவுண்ட் லேண்ட் கடல் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேடுதல் பணியின் போது கடலின் அடி ஆழத்தில் இருந்து பயங்கர ஒலியுடன் சிக்னல் கிடைத்துள்ளது. ரிமோர்ட் மூலம் இயக்கப்பட்டு ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளும் சோனார் கருவி இந்த தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்ட நிலையில் அந்த கருவி ஆழ்கடலில் நீர்மூழ்கி கப்பல் மாயமான பகுதியில் பயங்கர ஒலியுடன் வித்தியாசமான சிக்னல் வருவதை கனடா விமானப்படையின் தேடுதல் விமானத்திற்கு பகிர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த தகவல் உடனடியாக அமெரிக்க கடற்படைக்கு பகிரப்பட்டுள்ளது. கடலின் அடியாழத்தில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மாயமான பகுதியில் 30 நிமிட இடைவெளியில் பயங்கர சத்தத்துடன் சிக்னல் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிக்னல் நீர்மூழ்கி கப்பலில் இருந்து தான் வருகிறதா? என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை. ஆனாலும், 30 நிமிட இடைவெளியில் பயங்கர சத்தம் கேட்பதால் அது நீர்மூழ்கி கப்பலில் இருந்து தான் வரும் சிக்னல் சத்தமாக இருக்கலாம் என்று தேடுதல் குழுவினர் கருதுகின்றனர்.

இதனை தொடர்ந்து 30 நிமிட இடைவெளியில் விட்டு விட்டு வரும் அந்த பயங்கர ஒலியின் எந்த பகுதியில் இருந்து வருகிறது என்பதை ஆராய்ந்து அப்பகுதியில் தேடுதல் பணியை அமெரிக்கா, கனடா கடற்படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.