என்றுமே இசை நம்மை வேறு ஓர் வசீகர உலகத்திற்கு அழைத்துச் செல்வது நாம் உணரும் ஒன்று! அது எம்மொழியில் இருந்தாலும் இசை தன் வசப்படுத்துவது அதன் இயல்பு. ஆனாலும் அந்த இசையை தன் குரலால் உலக மக்களை காந்தத்தைப் போல தன் வசம் இழுத்தல் ஒரு சிலரால் மட்டுமே இயலும். 

அவ்வகையில் எப்போதும் சிரித்த முகத்தோடு பல்லாயிரம் பாடல்கள் பாடி சாதித்தும் கொஞ்சம் கூட கர்வம் கொள்ளாது, அனைவரிடமும் சமமாகப் பழகி,உடன் இருப்போரை அரவணைத்துச் செல்லும் மிகப் பிரபலமான பாடகரான நமது மனோ அவர்கள், மே 14 ஆம் தேதி அன்று சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தி, அத்தனை தமிழ்,தெலுங்கு மக்களையும் அளவில்லா குஷிப் படுத்தியும், குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எழுந்து ஆட வைத்தும், அரங்கமே அதிரும்படியான ஓர் ஆர்ப்பரிக்கும் இன்னிசை நிகழ்ச்சியை அளித்தார். 

அவருடன் 5 சிறந்த பாடகர்களும், 7 இசைக்க கலைஞர்களும் ‘கல்யாண்ஸ் கோல்டன் ரிதம்ஸ்' இன்னிசை குழு மூலம் வந்திருந்தனர். திரு.கல்யாண் அவர்களும் வந்திருந்தார். வானிலிருந்து வந்த தேவதைகள் போல குட்டிக் குழந்தைகள் வெள்ளை உடையில் ஆடிப்பாடி, 'மனோ அங்கிள், எங்கிருக்கீங்க?' என வரவேற்க, மனோ அவர்கள் மேடைக்கு வந்து அவர்களோடு ஆடியது மறக்க இயலாது.
'ஆனந்த யாழ்’ எனும் சான் ஆண்டோனியோவின் இசைக்குழுவும் இணைந்து அவர்களோடு மேடையில் பாடி அசத்தினர். பாராட்டுக்களும் பெற்றனர்!

தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.செல்வகிரி மற்றும் சங்க உறுப்பினர்கள் மற்றும்  தன்னார்வலர்களின் பெரும் முயற்சியும் உழைப்புமே இந்நிகழ்வு மாபெரும் சிறப்பு நிகழ்வாக வெற்றிகரமாக அமையக் காரணம். 

அச்சில் பதிக்கப்படும் படியாக இந்நிகழ்வு அமைய வேண்டும் எனும் அவர்களின் ஆர்வமும் செயலும் பாராட்டத்தக்கது. புகைப்படங்களும்,காணொளியும் எடுத்து அளித்த மோகன் நாகராஜன் மற்றும் ஈஸ்வரய்யா இருவருக்கும் நன்றி!

மேடையில் அனைத்துக் கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி, கௌரவித்தனர் நமது சங்கத்தினர். எங்குமே இல்லாத கொண்டாட்ட மகிழ்வு இங்கே எங்களுக்கு கிடைத்தது என அக்கலைஞர்கள் அனைவரும் கூறியபோது இதற்காக உழைத்த அத்தனை தன்னார்வலர்களுக்கும் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது! 

இந்நிகழ்வுக்கு கொடை அளித்தவர்களுக்கும், தொடர்ந்து நன்கொடை அளித்து சிறப்பித்து வரும் கொடையாளர்களுக்கும் சங்கத்தின் சார்பாக மிக்க நன்றி! 

நிருபர்
-ஷீலா ரமணன்