நியூசிலாந்தின் பெண்கள் ரக்பி அணியான பிளாக் ஃபெர்ன்ஸ் அணி ரக்பி உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியை கொண்டாடும் நிகழ்வு டிசம்பர் 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதனை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார்.

இது நியூசிலாந்தர்கள் உலகக் கோப்பை வென்ற அணியை சந்திக்கவும், அவர்களுடன் நிகழ்வில் கலந்து கொள்ளவும் மற்றும் கொண்டாடவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என பிரதமர் ஆர்டெர்ன் கூறினார்.
 
இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கிராண்ட் ராபர்ட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

நியூசிலாந்தின் பிளாக் ஃபெர்ன்ஸ் அணி பெற்ற வெற்றி நியூசிலாந்தின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாகும்

அவர்கள் அசாதாரண விளையாட்டு வீரர்கள், விதிவிலக்கான நபர்கள் மற்றும் பெருமைமிக்க நியூசிலாந்தர்கள்.

இந்தப் பெண்களைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம், பெண்களிடம் விளையாட்டு முதலிடம் வகிக்கிறது என்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வெலிங்டன் சிட்டி கவுன்சில் மற்றும் நியூசிலாந்து ரக்பி ஆகிய நிறுவனங்களுடன் இந்த நிகழ்வை நடத்த அரசாங்கம் கூட்டு சேரும் என கூறப்பட்டுள்ளது.