ஈரானில் 22 வயது இளம்பெண், சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி அந்நாட்டு பொலிஸார் அடித்து கொன்ற சம்பவம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பொலிஸாரின் தாக்குதலில் அப்பெண் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தங்களது கூந்தலை வெட்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரானில் பெண்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நியூசிலாந்தில் கிவிகள் இன்று வெலிங்டனில் கூடி போராட்டம் நடத்தினர்.

22 வயதான பெண் மஹ்சா அமினியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வெலிங்டனில் காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிவிகள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் பசுமை கட்சி எம்பி கோல்ரிஸ் கஹ்ராமன் உட்பட பல பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பு போரட்டத்தின் ஏற்பாட்டாளர் ஹன்னா ஹபிபி கூறுகையில், இன்றைய வெலிங்டன் போராட்டம் ஈரானில் பெண்களை அடக்குமுறை மற்றும் பாரபட்சமாக நடத்துவதை வன்மையாகக் கண்டிக்கும் வகையில் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.

"பாலினத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை நாங்கள் கோருகிறோம், சட்டத்தில் குறியிடப்பட்ட மற்றும் நமது நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கும் இது பொருந்தும்" என்று அவர் கூறினார்.

இந்த எதிர்ப்பாளர்கள் ஹிஜாப்பை எதிர்ப்பவர்கள் அல்ல என்று ஹபிபி வலியுறுத்தினார்.

நாங்கள் ஹிஜாபை மதிக்கிறோம், ஹிஜாப் அணியாதவர்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." என அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஈரானிய அரசு பெண்களை நடத்தும் விதத்தை நியூசிலாந்து அரசு கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இன்று பிற்பகல் ஆக்லாந்தின் அயோட்டியா சதுக்கம் மற்றும் கிறிஸ்ட்சர்ச்சின் கதீட்ரல் சதுக்கத்திலும் போராட்டக்காரர்கள் பேரணி நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.