நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் இறுதிநாள் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிசார் இன்று காலை Golden Bay இல் 29 வயதுடைய ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்ததாக இன்று மாலை ஒரு அறிக்கையில் கூறப்பட்டது.

இந்நிலையில் வேண்டுமென்றே சேதம் விளைவித்ததாகவும், அபாயகரமான செயலை உள்நோக்கத்துடன் செய்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருவரும் திங்கள்கிழமை நெல்சன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் நெல்சனில் 50 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் ஆயுதத்தால் தாக்கியதாகவும், ஆபத்தான செயலை உள்நோக்கத்துடன் செய்ததாகவும், கலவரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் இன்று நெல்சன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணை தொடர்வதால் மேலும் கைது இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே நியூசிலாந்து பாராளுமன்ற எல்லைக்குள் நுழைந்தால் 1000 டொலர்கள் அபராதம் அல்லது இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்ற மைதானத்தை ஆக்கிரமித்த எந்தவொரு எதிர்ப்பாளர்களும் அடுத்த தேர்தல் முடியும் வரை பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய தடை விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

முன்னாள் தேசிய எம்பி மாட் கிங் மற்றும் நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் ஆகியோருக்கும் இந்த தடை விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் இருவரின் நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.