இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, நியூசிலாந்தின் எல்லை இன்று நள்ளிரவு சர்வதேச பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட உள்ளது.

19 மார்ச் 2020 அன்று, கொவிட்-19 தொடர்பான இறப்புகள் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு, குடியுரிமை அல்லது வதிவிட உரிமை இல்லாத எவருக்கும் நியூசிலாந்து தனது எல்லையை மூடியது.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இன்று, விசா விலக்கு நாடுகளில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட பார்வையாளர்களை மீண்டும் நியூசிலாந்துக்கு வரவேற்க நாட்டின் எல்லை மீண்டும் திறக்கப்பட்ட உள்ளது.

தடுப்பூசி போடப்பட்ட ஆஸ்திரேலியர்கள் மற்றும் சில சர்வதேச மாணவர்களுக்கு நியூசிலாந்து ஏற்கனவே தனது எல்லையை திறந்துள்ளது.

இந்நிலையில் இன்று சர்வதேச பயணிகளுக்காக எல்லை திறக்கப்பட உள்ள நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் பிஜியிலிருந்து வரும் முதல் மூன்று விமானங்களில் ஏறக்குறைய 1000 பேர் வருவார்கள் என்று ஏர் நியூசிலாந்து தலைமை நிர்வாகி கிரெக் ஃபோரன் கூறினார்.