பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடந்த வன்முறை மோதலைத் தொடர்ந்து குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களைக் ஒன்றிணைக்க நாடு முழுவதும் போராட்ட நடவடிக்கைகள் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வெலிங்டன் பாராளுமன்றத்தில் மூன்று வார ஆக்கிரமிப்பை அடுத்து போராட்டக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் காவல்துறையை எதிர்த்ததால் கலவரம் ஏற்பட்டது.

அதிகாரிகள் மீது பொருட்கள் மற்றும் செங்கல் வீசப்பட்டதுடன்  வன்முறை கைகலப்புகள் ஏற்பட்டது. மேலும் கூடாரங்கள் தீப்பிடித்தன.

இதனையடுத்து வெலிங்டன் பகுதியிலும் நாடு முழுவதிலும் எதிர்ப்பாளர்களின் சிறிய கூட்டங்கள் இன்னும் காணப்படுகின்றன.

இந்நிலையில் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், வார இறுதி முழுவதும் அதிக அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வன்முறையைக் காட்டும் வீடியோ அல்லது  புகைப்படங்களை பதிவேற்றி வைத்திருப்பவர்கள் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களைக் கண்டறிய உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மேலும் ஏற்கனவே ஆதாரங்களை ஒப்படைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதனிடையே பாராளுமன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் போராட்டம் நடைபெறும் இடங்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புகளை பொலிஸார் தொடர்ந்து அகற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.