பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் நேற்றைய வன்முறை தாக்குதல் குறித்து பொலிசார்  விசாரணைகளை தொடங்கியுள்ளனர் மற்றும் எந்தவொரு குற்றச் செயல்களுக்கும் மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

போராட்டத்தின் பின்விளைவுகள் குறித்த சமீபத்திய தகவல்களை வழங்க காவல்துறை உதவி ஆணையர் ரிச்சர்ட் சேம்பர்ஸ் இன்று ஊடக சந்திப்பை நடத்தியுள்ளார்.

கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டக்காரர்களை நேற்று பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து பொலிஸார் அப்புறப்படுத்திய போது மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று 89 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இன்று மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சேம்பர்ஸ் கூறினார்.

பொலிஸார் இப்போது ஒரு விசாரணைக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக அவர் கூறினார்.

"நேற்று மக்கள் செய்த குற்றச் செயல்களுக்குப் பொறுப்பேற்க உதவுவதற்காக, ஏராளமான காட்சிகள், பொதுமக்களின் ஆதரவு மற்றும் பிற தகவல் ஆதாரங்களை ஒன்றிணைக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்."

விசாரணை "தேவைப்படும் வரை" தொடரும் என்று சேம்பர்ஸ் கூறினார்.

ஒருவரின் நடத்தை குற்றமானது என்று ஏதேனும் ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால், நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுப்போம்‌ என அவர் தெரிவித்தார்.

நேற்று 40க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பொலிஸார் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே நேற்று வெலிங்டன் இலவச ஆம்புலன்ஸின் ஆதரவிற்கு காவல்துறை நன்றி தெரிவித்ததாக சேம்பர்ஸ் கூறினார்.

இன்று CBD பகுதியின் சுற்றுவட்டாரத்தில் காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மிராமர் தீபகற்பம் உட்பட வெலிங்டனைச் சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் எதிர்ப்பாளர்கள் தற்போது கூடிவருகின்றனர்.

பொலிஸார் அவர்களை "மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்" என்று சேம்பர்ஸ் கூறினார்.

வெலிங்டன் பிராந்தியத்தில் எஞ்சியிருக்கும் எந்தவொரு எதிர்ப்பாளர்களும் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று சேம்பர்ஸ் கூறினார்.

மேலும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் பொலிஸார் கண்காணிப்பார்கள் என்று சேம்பர்ஸ் கூறினார்.

நாட்டில் எந்த இடத்தில் போராட்டங்கள் நடந்தாலும், அந்த இடத்தில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் "வெலிங்டன் மக்களுக்கு நான் மிகவும் நன்றி கூற விரும்புகிறேன். நேற்றும் இன்றும் பணியில் ஈடுபட்ட காவல்துறை ஊழியர்களுக்கு அவர்கள் காட்டிய ஆதரவு அளப்பரியது." என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் காவல்துறையினரின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து "ஆயிரக்கணக்கான" செய்திகள் வந்துள்ளதாக அவர் கூறினார்.