முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திலிருந்து தான் விலகுவதற்கு சில முஸ்லிம் அரசியல் தரப்பினரும், தனிப்பட்ட குரோதம் கொண்டவர்களுமே காரணம் என்று முஸ்லிம் சமய கலாசார திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான, பதவிவிலகல் கடிதத்தை கடந்த முதலா்ம திகதி தான் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளரான பேராசிரியர் கபில குணவர்த்தனவிடம் கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக செயற்பட்டு வந்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் தான் பதவி விலகுவதற்கு புரிந்துணர்வு அடிப்படையிலான காரணங்களே இருப்பதாகவும், அரசாங்கம் அல்லது புத்தசாசன அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினரின் எந்தவித அழுத்தங்களும் காரணமில்லை என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், "சிங்கள சமூகத்தினராலும் எனக்கு எந்தவித பாதிப்புகளோ அழுத்தங்களோ ஏற்படவில்லை. அமைச்சு ரீதியாக நான் விலகுவதையிட்டு அதிருப்தி வெளியிட்டார்கள்.
எனக்கு பதவி வகிக்கக் கூடிய வெற்றிடங்கள் இருப்பின் அதுபற்றி அறிவிக்குமாறும், இடமாற்றங்களை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் தரப்பினர் பிரதமரிடமும், அரச உயர் பீடங்களிமும் தன்னைப் பற்றி அவதூறான நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருந்தனர்.

மொத்த முஸ்லிம் சமூகமும் என்னை வெறுப்பதாக ஒரு போலியான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தனர். இப்படிப்பட்ட
எதிர் கொள்கையுடையவர்கள் எங்களின் சமூகத்திற்குள்ளேயே இருக்கின்றார்கள்" என்று முஸ்லிம் சமய கலாசார திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் மேலும் குறிப்பிட்டார்.