உக்ரைன் மீது ரஷியா நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்ய போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் உலக நாடுகளின் எதிர்ப்பார்ப்பு.

போரைத்தொடங்கி வீறுகொண்டு நடத்தினாலும், சமரச பேச்சு நடத்த ரஷ்யா இணங்கி வந்துள்ளது.

பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருந்து வருகிற அழுத்தங்களும் ரஷ்யாவை இறங்கி வரச்செய்துள்ளது.

பேச்சுவார்த்தைக்காக பெலாரஸ் நாட்டில் உள்ள ஹோமெல் நகருக்கு ரஷ்ய தூதுக்குழு வந்து சேர்ந்து விட்டதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

அவர்கள் உக்ரைன் தூதுக்குழுவின் வருகைக்காக காத்திருப்பதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமெட்ரி பெஸ்கோவ் உறுதி செய்திருந்தார்.

ரஷ்யாவுடன் பெலாரஸ் நாட்டின் ஹோமெல் நகரில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவிப்பதாக உக்ரைன் அரசு நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதன்படி பெலாரஸ் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒரு குழுவை அனுப்புவதை உறுதி செய்திருந்தது.

இந்நிலையில்  ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ரஷ்ய அதிபரின் உதவியாளரான இந்த விளாடிமிர் மெடின்ஸ்கி இதுபற்றி நிருபர்களிடம் கூறும்போது, “இரு தரப்பும் சமரச பேச்சுவார்த்தைக்கு தீர்மானித்துள்ளன.

உக்ரைனியர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்புடன் இது நடக்கும். பயண பாதை 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

உக்ரைனிய பிரதிநிதிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று நிருபர்களிடம் தெரிவித்ததாக ஆர்.டி.நியூஸ் தெரிவித்துள்ளது.