தனது பள்ளியில் சக மாணவிகளால் தாக்கப்பட்ட 17 வயதான ஒடாகோ இஸ்லாமிய பெண் ஹோடா அல்-ஜமாவிற்கு நீதி கோரி ஏற்பாடு செய்யப்பட்ட மனுவில் ஒரு நாளில் 42,000 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Hoda Al-Jamaa கடந்த வாரம் Otago பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது தோழிகளுடன் அமர்ந்திருந்த போது மூன்று பெண்கள் அருகில் வந்து அவளை அடிக்க ஆரம்பித்தனர்.

இத்தாக்குதல் ஒரு வெறுக்கத்தக்க குற்றம் என இஸ்லாமிய மகளிர் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மூன்று பெண்கள் ஹோடாவிடமும் அவரது நண்பர்களிடமும் அரபு மொழியில் சத்தியம் செய்வது எப்படி என்று கேட்டு அவர்களை கேலி செய்யத் தொடங்கியபோது இந்த தாக்குதல் நடந்ததாக ஹோடா தெரிவித்துள்ளார்.

இரண்டு பெண்கள் என்னைப் பிடித்தார்கள், ஒருவர் என்னை அடித்தார், நான் தரையில் விழுந்த பின்னரும் அவர் என்னை தாக்கினார் என ஹோடா கூறினார்.

பின்னர் பெண்கள் அவரது ஹிஜாபை கழற்றி அவளை தொடர்ந்து வீடியோ எடுத்த நிலையில் தற்போது குறித்த வீடியோ பள்ளியில் உள்ள சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுடன் பகிரப்பட்டுள்ளது.

"என் ஹிஜாப்... என் கலாச்சாரம் மற்றும் என் மதம். என் ஹிஜாப் தான் எனக்கு எல்லாமே, நான் என் ஹிஜாபை விரும்புகிறேன் எனவும் ஹோடா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல, அவர் அடிக்கடி‌ மற்ற மாணவர்களால் பயங்கரவாதி என்று அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெப்ரவரி 9 புதன்கிழமை அன்று நடந்த இச்சம்பவத்தில் ஒரு இளம் பெண்ணின் ஹிஜாப் தலையில் இருந்து கழற்றப்பட்டது. அந்த தாக்குதல் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவது எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

"குற்றவாளிகள் என்று கூறப்படும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் "இந்த தாக்குதல் குறித்த சிறுமிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பரந்த இஸ்லாமிய சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க கவலையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.