புல்லர் மாவட்டத்தில் (Buller District) அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

புல்லர் மற்றும் வெஸ்ட்லேண்டில் (Westland) கடும் மழை காரணமாக, அங்கு MetService சிவப்பு வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, இது மிகவும் கடுமையான வானிலை எச்சரிக்கையாக கருதப்படுகிறது.

  Franz Josef மற்றும் Fox Glacier நகரங்களில் சுமார் 600 வீடுகள் மற்றும் வணிகங்கள் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இன்று மதியம் 2.30 மணியளவில் பிரகடனப்படுத்தப்பட்ட  அவசரகாலச் சட்டம், சிவில் பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளர்களுக்கு கிடைக்கக்கூடிய பணியாளர்கள், பொருள் மற்றும் பிற வளங்களை இயக்குவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும், அவசரநிலைக்கு பதிலளிப்பதற்கான அசாதாரண அதிகாரங்களை அவர்களுக்கு வழங்குவதற்கும் அனுமதிப்பதாக புல்லர் மாவட்ட கவுன்சில் கூறியது.

புல்லர் மேயர் ஜேமி க்ளீன் கூறுகையில், மழை தொடரும் பட்சத்தில், வரும் நாட்களில் வெஸ்ட்போர்ட்டில் மக்கள் வெளியேற்றப்பட வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.

பல நாட்களாக மழை பெய்து வருவதால் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மிகப்பெரிய பாதிப்புகள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.

தற்போதைய வானிலை நிகழ்வு புல்லர் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது" என்று க்ளீன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நாளை வெளியேற்றப்படுவதற்குத் தயாராகும் வகையில், வெளியேறும் பைகளைத் தயார்படுத்துமாறு குடியிருப்பாளர்களுக்கு அவர் நினைவூட்டினார்.

வெஸ்ட்போர்ட்டில் உள்ள ஓ'கானர் ரெஸ்ட் ஹோம் பகுதியில் ஏற்கனவே 68 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பத்து பாதுகாப்புப் படை வீரர்கள், நான்கு டிரக்குகள் மற்றும் ஒரு உதவி வாகனத்துடன், வரும் நாட்களில் ஏதேனும் வெளியேற்றங்களுக்கு உதவுவதற்காக கிரேமவுத் நோக்கிச் சென்றுள்ளனர்.

மேலும் RNZAF NH90 ஹெலிகாப்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று காலை மாபூரிக்கா ஏரியில் மரம் ஒன்று மின்கம்பியில் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது.

இன்று அதிகாலையில் இருந்து வெஸ்ட்லேண்டில் கனமழை பெய்து புல்லரை நோக்கி நகர்ந்ததாக MetService வானிலை ஆய்வாளர் லூயிஸ் பெர்ரிஸ் மிட்டே ரிப்போர்ட்டிடம் தெரிவித்தார்.

மேலும் நாளை நண்பகலில் வெஸ்ட்லேண்ட் எல்லைகளில் 700 மில்லிமீட்டர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.