அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ப்ரிஸ்கோ நகரில் ‘எஸ்டேட்ஸ் அட் ஷேடக் பார்க்கில்’ வாழும் சுமார் 250 தமிழர்கள் ஒன்றுகூடி 2024 ஆம் ஆண்டின் பொங்கல் விழாவை மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் . 

கடல் கடந்து வாழ்ந்த போதும் , தங்கள் மொழியின் மீதும் பண்பாட்டின் மீதும் உள்ள பற்றால் , ஜனவரி 27 ஆம் தேதி கடந்த சனிக்கிழமை அன்று அனைத்து தழிழர்களும் ஒன்றிணைந்து பொங்கல் விழாவை மிக அமர்க்களமாகக் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சி காலை சுமார் 9 மணியளவில் , எழுச்சியூட்டும் தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பித்தது. அதன் பின்பு, ஆடல் , பாடல், இசைக்கருவிகள் வாசித்தல் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள் திறமையால் பார்வையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திவிட்டனர்.

இந்தியாவிலிருந்து தங்கள் பிள்ளைகளின் வீட்டிற்கு வந்திருந்த பெற்றோர்களும் பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றது அனைவருக்கும் மிக நெகிழ்ச்சியாக இருந்தது.

விழிகளுக்கும், செவிகளுக்கும் விருந்து அளித்ததோடு நிறுத்திவிடாமல் வந்திருந்த அனைவருக்கும் சர்க்கரை பொங்கலோடு நாவூறும் அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது.
அஃதோடு மட்டுமில்லாமல், நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை குளிருக்கு இதமாக சூடான தேநீரும் வழங்கபட்டது. 

கலைநிகழ்ச்சிகளோடு நிறுத்திவிடாமல் தனிதிறமைகளை ஊக்குவிக்கும் விதமாக சிறுவர்களுக்கு ( வயதிற்கேற்ற ) ஓவியப்போட்டியும் , பெண்களுக்கு கோலப்போட்டியும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.

  

எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் ஒரேகுடும்பமே என்பதை பறைச்சாற்றவும் , இந்த மகிழ்ச்சியான தருணத்தை என்றென்றும் எண்ணி மகிழவும் அனைவரும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துவிட்டு , நிறைந்த மனதுடன் வீடு திரும்பினோம்.

எமது நிருபர் - ஷீலா ரமணன்