'த்ரில் அனுபவங்கள்- அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ பயணம்'

'திக் திக்' மனசோடு மெக்சிகோ பக்கம் வந்து விட்டோம் அல்லவா, நாம் தான் சேர,சோழ,பாண்டியர்கள் ஆண்ட மண்ணில் இருந்து வந்து விட்டு இம்மண்ணில் கால் வைக்கப் பயம் கொள்வதா என மைண்ட் வாய்ஸ் நம்மை தேத்த நடக்க ஆரம்பித்தோம்.

சிறிது கரடுமுரடான சரிவான மண்பாதை தான்,வழியில் மரப்பலகைகள் போட்டுள்ளனர் வழுக்காமலோ,விழாமலோ இருப்பதற்காக. இரண்டு நிமிடம் நடக்கும் தூரம். அங்கே நாம் மேலே சொன்ன 'ரியோ கிராந்த்தே' நதியைப் பார்க்கலாம். இக்கரையிலிருந்து அக்கரையில் உள்ள மெக்சிகோ மலைப் பகுதியை பார்க்கலாம்.

அப்பகுதியை ஒட்டி வாழும் மெக்சிகோ மக்கள் குடும்பம் குடும்பமாக கைவினைப் பொருட்கள் செய்து விற்கிறார்கள். பெரும்பாலும் ஆண்கள் அங்கே வரும் விசிட்டர்ஸ்களை அக்கரையில் இருந்து இக்கரை அழைத்து வரும்  படகோட்டி களாகவும், அங்கே கழுதை மற்றும் குதிரைகளில் ஏற்றி சுற்றிக் காண்பிக்கும் கைடுகளாகவும் வேலை செய்கிறார்கள். மேலும் சின்ன சின்ன உணவகங்கள் அங்கே உள்ளன. 

பெண்களும் குழந்தைகளும் அவர்களது கைவினைப் பொருட்களான பலவண்ண துணிகளில் எம்ப்ராய்டரி செய்த தோல் பைகளும்,கைப்பைகளும் விற்கிறார்கள். மேலும் மரவேலைப்பாடுகள் செய்த அலங்காரப் பொருட்கள், தொப்பிகள், அணிகலன்கள் என அனைத்தும் வண்ணமயமாகவும் அழகாகவும் இருக்கின்றன. இதில் வரும் வருமானமே அவர்கள் வாழ்க்கை. நாங்கள் எங்களுக்கும்,தோழிகளுக்கும் சில பொருட்கள் வாங்கினோம். 

நாங்கள் சில பொருட்களுக்கு பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம் ஒரு புறம், என் மகளோ ஒரு டாலர் மதிப்புள்ள பாசிமணி பிரேஸ்லெட்டை (கை வளையல் போன்ற ஒன்று) விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் ஐந்து டாலர் கொடுத்து வாங்கிக் கொண்டு வந்தாள். கேட்டால் 'பாவம்,சைல்ட் லேபர். நான் வேண்டும் என்றே தான் குறைத்துக் கேட்கவில்லை' என்றாள்! 

அப்பக்கம் செல்ல நூறடி தொலைவு படகுப்பயணம். கட்டணம் ஐந்து அமெரிக்க டாலர்கள். நாங்கள் டிசம்பர் மாதம் சென்றோம். அவ்வளவாக நீர்வரத்து இல்லை. 

இரு நிமிடங்களில் நாம் மெக்சிகோ பக்கம்! அப்பக்கம் கலகலவென்று இருந்தது. இங்கிருந்தே சத்தம் கேட்கிறது. படகை ஓட்டுபவர்கள் ஓரளவு ஆங்கிலம் பேசுகிறார்கள். இந்த ஆற்றின் பெருமையை கூறிக்கொண்டே வந்தார் எங்கள் படகை ஓட்டியவர். அப்பக்கம் இறங்கியதும் கழுதைகளும்,குதிரைகளும் வைத்திருப்போர் கூப்பிடுகிறார்கள். நாங்கள் அதிக நேரம் இல்லாத காரணத்தால் ஒரு மினி ட்ரக்கில் ஏறிச் சென்றோம். அப்போது சொன்ன மாதிரி கரடுமுரடான பாதை. ஷாப்பிங் மூடில் நானும் என் பெண்ணும்! செலவழிக்கும் மூடில் என் கணவர்!

அங்கேயே அவர்களின் வீடுகள் உள்ளன. எல்லா கடைகளையும் சுற்றி பார்த்தோம். அங்கே இருப்போரிடம் பேசினேன். இங்குள்ள குழந்தைகள் படிக்கிறார்களா? பள்ளிக்கூடம் உள்ளதா என்று. இருப்பதாக தூரத்தில் கை காட்டினார்கள். மேலும் வாரம் ஒருமுறையோ இருமுறைகளையோ ஊருக்குள் சென்று மளிகை சாமான்கள் மற்றும் இதர பொருட்கள் வாங்கிவருவார்களாம். அது தவிர ஹோல் சேல் வியாபாரிகளும் வந்து விற்பார்களாம். 

நேரமின்மை காரணமாக என் கணவரோ கதவை மூடுவதற்குள் கிளம்பு என பயமுறுத்த, கிளம்ப மனசே இல்லாமல் ஒரு குட்பை சொல்லிவிட்டு கிளம்பினோம் அதே வண்டியில். அதற்கும் படகைப் போலவே ஐந்து டாலர்கள் கட்டணம். வழியில் நிறையப்பேர் கழுதை மற்றும் குதிரையில் வந்து கொண்டிருந்தனர். மீண்டும் அதே படகு நம் அமெரிக்கா பக்கம் செல்ல. எங்களோடு வந்தவர்கள் அனைவரும் திரும்பி விட்டனர். சரியாக மாலை நான்கு மணிக்குள் இப்பக்கம் உள்ள கேட் வாசலில் வந்து நின்றோம். 

எங்கள் முறை வந்தவுடன் கதவைத் திறந்து உள்ளே விட்டனர். மீண்டும் எங்கள் உடலும், கைப்பைகளும் சோதனை செய்யப்பட்டது. பின்னர் பாஸ்போர்ட் மறு சோதனை செய்தவுடன் ஒவ்வொருவராக இமிகிரேஷன் கியாஸ்க் (Immigration Kiosk) அருகே சென்று நம் பாஸ்போர்ட்டை வைக்க வேண்டும், பின் எதிரே உள்ள கேமரா நம்மை பதிவு செய்கிறது. அதன் பின்னர் அமெரிக்கன் இமிகிரேஷன் ஆஃபீஸில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு நமக்கு வருகிறது. உடனே எடுக்க வேண்டும். நம் பேரைச் சொல்லி நாம் தானா என உறுதி செய்கிறார்கள். பின் 'வெல்கம் டு யுனைடெட் ஸ்டேட்ஸ்' என வாழ்த்து கூறியவுடன் நாம் தொலைபேசியை வைக்க வேண்டும். அதன் பின்னர் நமது பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற வேண்டும். 

அப்பாடா,, எங்க நாட்டுக்கு,எங்க ஊருக்கு வந்துவிட்டோம்!

மிக நல்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கே உள்ளன. அதையும் மீறி அப்பப்போ சில சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது என்கிறார்கள். அங்கிருந்து நம் காரில் ஏறி மீண்டும் பார்க்கின் உள்ளே சுற்றிப்பார்க்கும் பயணம். எல்லாம் பார்த்துக் களைத்து பார்க்கை விட்டு வெளியே வந்தோம். நல்ல பசி. கொண்டு வைத்த ஸ்நாக்ஸ் சாப்பிட்டோம். காபிக்காக மனம் ஏங்கியது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு வழியில் ஒன்றுமே இல்லை. அது தான் பாலைவனப்பகுதியாச்சே! 

பின் ஆல்பைன் வந்தது. போகும் போது அங்கு தான் இறங்கி ஆஹா,ஓஹோ என போட்டோஸ் எல்லாம் எடுத்த எனர்ஜி இப்போது இல்லை, அதனால் சுரத்தே இல்லாமல் ஆல்பய்ன்க்கு ஒரு குட் பை சொல்லிவிட்டு அதற்கடுத்து உள்ள ஒரு இடத்தில் பெட்ரோல் மற்றும் பிஸ்சா கிடைக்கவே அங்கே நாங்கள் ஏங்கிக் கொண்டிருந்த காபி குடித்தோம். அப்போது ஒரு இந்திய வடநாட்டு குடும்பத்தை சந்தித்தோம். அவர்கள் இனிமேல் தான் போகிறார்கள். எனவே எங்களிடம் எங்கே தங்கணும்,என்னவெல்லாம் பார்க்கணும் என அனைத்தும் கேட்டுக் கொண்டனர். 

பின்னர் மீண்டும் மலைப்பகுதியில் தன்னந்தனியே பயணம். ரோட்டில் ஒரு ஈ,காக்காய் இல்லை.(ஆதி காலத்திலிருந்து இதே டயலாக்-சொல்லி சொல்லி பழகிடுச்சுல்ல) இருட்டத் தொடங்கிவிட்டது. நேராக எங்கள் ஊரான சான் ஆண்டோனியோவிற்கு பயணம். பாதி தூரம் கடந்த படியால் இங்கிருந்து நாலரை மணி நேரப்பயணம். இரவு பத்தரை மணியளவில் வீடு சேருவோம் என கணக்கிட்டோம். 

செவ்வானம் மங்கி இளம் இருட்டு ஆரம்பம். எதிரே அவ்வப்போது கார்கள் சென்றன. சத்தமாக நம் பாடல்களைக் கேட்டுக்கொண்டே பயணித்தோம். அவ்வளவு களைப்பாக நாங்கள் இல்லை என்றே தோன்றியது. அப்போது இமைக்கும் நொடிக்குள் சடாரென மிகப்பெரிய உருவம் திடீரென சார் முன்னே நின்றார் போலிருக்க என் கணவர் காரை பிரேக் போட அனைவரும் நிலை தடுமாறினோம்! பார்த்தால் நல்ல நீண்ட பல வளைவுகளைக் கொண்ட ஓர் மிகப்பெரிய உயரமான மான் இப்பக்கம் இருந்து அப்பக்கம் செல்ல நினைத்தது போல. எங்கள் கார் வேகமாக வருவதை அறிந்து நடு ரோட்டில் வந்த மான், அப்பக்கம் போகாமல் திரும்ப வந்த பக்கமே யூ டர்ன் அடித்தது தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம் எனப்பட்டது.  

அது மின்னலென வந்த வழியே மறைந்து சென்று விட்டது, ஆனால் எங்களால் சில நிமிடங்களுக்கு அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. மறக்க முடியாத ஓர் சந்திப்பு! பின்னர் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.

ஒன்றரை  மணி நேரத்தில் ‘டெல் ரியோ’ எனும் ஊர் வந்தது. இங்கு 'ரியோ க்ராந்தே' நதி கடந்து செல்கிறது. படகு பயணம் இருக்கிறதாகக் கேள்விப்பட்டோம். இரவாகி விட்டதால் அடுத்த முறை இங்கு வரும் போது பார்க்கலாம் என பேசிக்கொண்டோம். 

இங்கு மீண்டும் பார்டர் பேட்ரோல் அதிகாரிகள் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி பரிசோதனை செய்கிறார்கள். மோப்பநாய் வண்டிகளைச் சுற்றி வருகிறது. அதிகாரி ஒருவர் அருகே வந்தார்.நம்ம முகத்தைப் பார்த்ததும் பாஸ்போர்ட் கூட கேட்கலை,ஆர் யு சிடிஸின்? எனக்கேட்டார். நாம் 'ஆம்' என தலையை ஆட்டியதும் போகச் சொல்லிவிட்டனர். (நம்ம முகராசி அப்படி!)  

இப்போது என்று இல்லங்க, நிறைய இடங்களில் கார் அருகே வந்து நாம் கண்ணாடியை இறக்கி நம் ஐ டி கார்டு அல்லது லைசென்ஸ் காட்டினாலும் முழுவதும் கூட வாங்கிப் பார்த்ததில்லை. போ என்று கை காட்டுதலோ, போங்கள் என சொல்லியோ அனுப்பியுள்ளனர். அதனால் தான் 'முகராசி' என சொல்கிறேன்.

அதன் பின் சான் ஆண்டோனியோ நோக்கிப் பயணத்தை தொடர்ந்தோம். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம். இப்போது இரவு ஏழரை மணி. பத்தரை மணி அளவில் வீடு சென்று விடுவோம். கிறிஸ்துமஸ் காலம் என்பதால் வழியில் தென்பட்ட ஊர்களில் எல்லாம் ஜெகஜோதியாக லைட்களும், அலங்காரங்களும் மிகவும் ரம்மியமாக இருந்தது. 

மிக திருப்தியான சுற்றுலா பயணம் இந்த பாலைவனப் பயணம்! மூன்று நாட்களில் வேறு விதமான நிலம் மற்றும் சுற்றுச் சூழ்நிலைகளை பார்த்த அனுபவம். மேலும் பார்டர் தாண்டி 'மெக்சிகோ' பக்கம் போய் வந்த அனுபவங்கள் என மகிழ்வோடு வீட்டிற்குள் நுழைந்தோம்.

என் பயண அனுபவங்களை படித்த உங்களுக்கும் இப்பயணம் பிடித்திருக்கும் என நம்பிக்கையுடன் அடுத்த பயணத்திற்கு ஆவலாய் உள்ளேன் தங்களின் வாழ்த்துகளுடன்!

நன்றி! வணக்கம்!

- ஷீலா ரமணன்