'ஜம்மென்ற ஜீப் ரைடு'

போன அத்தியாயத்தில் 'பிக் பெண்ட் நேஷனல் பார்கில்’ உள்ள மலைப்பகுதியில் ஜீப் பயணத்தில் இம்மலைப் பகுதியைப் பற்றி கைடு கூறுவார் எனப் பார்த்தோம் அல்லவா, நமக்கு ஜீப் டிரைவரே கைடு தான்! 

இந்த நிலத்தைப் பற்றி அறியாத நமக்கு அந்தப் பகுதியில் வளர்ந்துள்ள செடிகளும்,பாறைகளும் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கையில் ஜீப்பை நிறுத்தி நிறுத்தி கீழே இறங்கி சில குறிப்பிட்ட செடிகளை பற்றிய ஆச்சரியப்படும் விஷயங்களை கைடு கூறினார். அதில் ஒன்று வித்தியாசமான செடி. அதன் இலைகளை கையில் கொடுத்து கசக்கி மோர்ந்து பார்க்கச் சொன்னார். (நான் பார்க்க வில்லை,மயக்கம்,கியக்கம் போட்டுட்டோம்னா, அதுலாம் கொஞ்சம் உஷார்! கூட வந்தவர்கள் நுகர,பின்னால் என் கணவரும் நுகர்ந்து கூறிய பின்னரே நானும் மோர்ந்து பார்த்தேன்) மோர்ந்து பார்த்தால் நாம் கிளீனிங் பண்ண உபயோகப்படுத்துவோமே 'குளோரக்ஸ்' அதன் வாடை! நிஜமாகவேங்க!

மேலும் பெரிய மழை பெய்யும் போது இந்த மலைப்பிரதேசமே கிளீன் செய்தது போல 'குளோரக்ஸ்' வாடை அடிக்குமாம். அதனால் எந்த வனவிலங்குகளும் அங்கு வராதாம். அப்புறம் நம்ம ஊர் குறிஞ்சி பூ போல அங்கு வருடத்திற்கு ஒரு முறையே பூக்கும் ஒருவிதமான பூ உள்ள செடியை காட்டினார். உலகிலேயே இங்கு மட்டுமே உள்ளதாம்! பரவாயில்லப்பா, நாம் உலக அதிசயமான இடத்திற்குத் தான் வந்துள்ளோம் என சந்தோஷப்பட்டேன்! 

இது போல சில அதிசய விஷயங்களைக் கூறிக்கொண்டே வந்தார். பிறகு நூறு வருடங்களுக்கு முன்னால் கனிமங்களை எடுத்தார்கள் என சொல்லியிருந்தேன்  அல்லவா? அதன் சுரங்கங்கள் உள்ள பகுதிக்கு உள்ளே சென்றோம். மெர்குரி  கிடைத்த இடத்தைக் காட்டினார்.

மேலும் விலைமதிப்புள்ள பலவகை கனிமங்களும்,ஆபரணங்கள் செய்யக்கூடிய கற்களும் கிடைத்ததாகவும், (இன்றும் உள்ளது) அதற்காக அப்போது வாழ்ந்த மக்கள் கடின உழைப்பைக் கொடுத்து, அதனால் உயிரையும் கொடுத்த கதைகளைக் கூறி கொண்டே வந்தார். அச்சுரங்கங்கள் எப்போதோ மூடி போய் விட்டன. இப்போதுள்ள தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மீண்டும் அரசு அங்கு ஆராயலாம்,முன்பு எதுவுமே வசதிகள் இல்லாமலே எவ்வளவோ தோண்டி எடுத்தார்கள் எனும் போது இப்போது செய்யலாமே என்று நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம். நம்ம பேச்சை எல்லாம் யார் கேட்கிறா?

ஜீப் பயணம் முடித்து மாலை நாலரை மணி அளவில் எங்கள் கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தோம். பசித்தது, அங்கிருந்து கிளம்பி ஆறு மணி அளவில் 'ஆல்பைனில்' ஒரு பிஸ்சா ரெஸ்ட்டாரெண்ட்க்கு வந்தோம். பாத்ரூம் போய்விட்டு என் பெண்ணிற்கு பிஸ்சா வாங்கிக் கொடுத்துவிட்டு நாங்கள் சூடாக காபி குடித்தோம். பிறகு நாங்கள் தங்கியிருந்த போர்ட் ஸ்டாக்டன் கிளம்பினோம். அங்கு 'ஹாலிடே இன்னில்' நல்ல ரெஸ்ட், தூக்கம். 

டே 3-மூன்றாம் நாள்:

இன்றுதான் மிக மிக எதிர்பார்ப்புடன் இருந்த நாள்! 

Most awaiting day னு ஆங்கிலத்தில் சொல்லுவாங்க இல்லையா. அந்த நாள்! பில்டப் அப் எல்லாம் பயங்கரமா இருக்கேனு கேட்கிறீங்களா? ஆமாங்க, நாடு விட்டு நாடு போகப்போறோம்! 

'பிக் பெண்ட் நேஷனல் பார்க்' பகுதி வட அமெரிக்காவின் தென் எல்லை பகுதி. அமெரிக்கா-மெக்சிகோ பார்டர். இப்பகுதியின் அந்தப்பக்கம் மெக்சிகோ. அதனால் நாட்டின் எல்லைப் பகுதி என்பதால் மிகுந்த பாதுகாப்பு செய்திருப்பார்கள். இதன் மற்றொரு சிறப்பம்சம் இரு நாடுகளின் சந்திப்பு மட்டுமல்ல. மூன்று மாநிலங்களும் சந்திக்கும் இடமும் கூட! 

அமெரிக்காவின் தென்மாநிலமான டெக்சாஸ், மெக்ஸிகோவின் கொகுய்லா Coahuila மற்றும் சிவாஹுவா-Chihuahua மாநிலங்களும் இங்கு தான் சந்திக்கின்றன. பரந்து விரிந்த நிலப்பகுதி என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன் அல்லவா, ஒரு நாள் போறாது அனைத்து பகுதிகளையும் பார்க்க விரும்புவோருக்கு. அதனால் தான் இதன் மற்றொரு பகுதியை நேற்றே ஓரளவு பார்த்தோம். இன்று வேறு ஒரு எல்லையை நோக்கி பயணம். 

பார்டர் பகுதிக்கு போகும் முன்பே, நேஷனல் பார்க்கின் நுழைவு வாயிலில் செக்யூரிட்டி செக் இருக்கிறார்கள். அங்கு நுழைவு பணம் கட்டிவிட்டு உள்ளே கார் போக வேண்டும். நேஷனல் பார்க் என்றவுடன் மரம், செடி-கொடி, பூங்கா, சறுக்கு மரம், விளையாட்டுத் தளங்கள், ஒரு மரத்தடியில் பெட்ஷீட் விரித்து, கொண்டு போன சாப்பாட்டுப் பொட்டலங்களை பிரித்து என்ஜாய் பண்ணலாம் என்று தானே கற்பனை பண்ணுகிறீர்கள். அது மாதிரி ஒன்றுமே பண்ண முடியாது. இது பாலைவனப் பயணம். காட்டுச் செடிகளும், மரங்களும் மலைகளும் உள்ள பகுதி. ஆனால் அழகாய் பராமரித்து,ஆங்காங்கே வழி காட்டும் பலகைகளும் வரைபடங்களும் வைத்திருக்கிறார்கள். அதனால் வழி மாறி எங்கும் சென்று விட மாட்டோம்.

மக்களே, அங்கு எங்குமே உணவு, தின்பண்டங்கள் விற்கும் எந்த கடைகளும் இல்லை. அதனால் கையோடு கொண்டு செல்வது நல்லது. ஹாட் ஸ்பிரிங் உள்ளது, சிறிது நேரம் காரில் இருந்து இறங்கி ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். இங்கு கேம்பிங் பண்ண திட்டமிடலாம். முன்பே அதற்கான பதிவு செய்து வரலாம். நான் முன்பே சொன்னது போல நோ இன்டர்நெட் ங்க! செல் போனுக்கு நல்ல ரெஸ்ட்! ஆனால் போட்டோஸ் எடுக்கலாமே!

இந்த நேஷனல் பார்க்கில் எதுலாம் பார்க்க வேண்டுமோ அவைகளை பார்த்துவிட்டு முக்கியமான இடத்திற்கு வந்தோம். கிளைமாக்ஸ்! 'போர்ட் ஆப் என்ட்ரி ' அமெரிக்கா-மெக்சிகோ பார்டர். அமெரிக்கா குடியுரிமை உள்ள மக்கள் மட்டுமே அனுமதி.

அங்கு உள்ள மிலிட்டரி அலுவலகத்திற்குள் நுழைந்தோம். நாங்கள் எங்கள் அமெரிக்க குடியுரிமை சிட்டிஸின்ஷிப் கார்டு- கொண்டு சென்றிருந்தோம். சிறிது நேரத்தில் எங்கள் பரிசீலனை முடிந்து அடுத்த கேட்- கதவு பகுதியில் ஒரு ஆஃபீசர் (மிகப்பெரிய மிலிட்டரி துப்பாக்கி அவர் கையில்) நின்றிருந்தார். நம் உடைகள் மற்றும் கொண்டு போகும் கைப்பைகள் பரிசோதனை செய்கிறார்கள். 

எங்களை போல சிலர் மெக்சிகோவிற்குள் போக தயாராக இருந்தவர்களிடம் அந்த ஆஃபீசர் பேசுகிறார்- 

“நீங்கள் இப்போது மெக்ஸிகோவின் நுழைவாயிலில் இருக்கிறீர்கள். இக்கதவைத் தாண்டியதும் கதவு மூடப்படும். நீங்கள் அங்கு சுற்றிப்பார்த்து விட்டு மாலை நான்கு மணிக்கே இக்கதவிற்கு வெளியே க்யூவில் வந்து சேர்ந்து விட வேண்டும். சரியாக மாலை ஐந்து மணிக்குள் நம் கதவு முற்றிலுமாக மூடி விடுவோம். தாமதித்தால் அங்கேயே இருக்க வேண்டியது தான்” எனும் பயமுறுத்தும் தொனியில் கூறவும், ஏதோ கொஞ்சம் ஒரு மாதிரிதான் இருந்தது. பில்டிங் ஸ்ட்ராங்,பேஸ்மெண்ட் வீக் மாதிரின்னு வச்சுக்கோங்களேன். எல்லாருக்கும் அதே பீலிங் தான் அங்கே இருக்கும். 

மேலும் நீங்கள் திரும்பி வரும்போது எவ்வித மண் சார்ந்த பொருட்கள் கொண்டு வரக்கூடாது என்றும் கூறினார். அதாவது காய்-கனிகள்,விதைகள் போன்று வாங்கி வரக்கூடாது. கைவினைப் பொருட்கள் வாங்கலாம். சாப்பிடுவதை அங்கேயே சாப்பிட்டு விட்டு வரவேண்டும்.இதெல்லாம் சட்டம். நாங்கள் திரும்பி வர தாமதிக்கக் கூடாது எனும் எண்ணம் மட்டும் திடமாக எடுத்துக் கொண்டோம். 

இந்த  'பிக் பெண்ட் நேஷனல் பார்க்’ அமெரிக்காவின் மிக நீளமான நதிகளில் ஒன்றான  'ரியோ கிராந்த்தே' எனும் நதியை ஒட்டி முடிவடைகிறது. ‘ரியோ கிராந்த்தே’ நதியும் அமெரிக்கா-மெக்சிகோ எல்லைகளை பிரிக்கும் ஒன்றே. பாருங்களேன்,மிக வித்தியாசமான குணங்கள் கொண்ட நிலப்பரப்பு! ஆறு,மலை மற்றும் பாலைவனம் என்று! 

சரி, நாம் இப்போது இந்த மிலிட்டரி செக்யூரிட்டி செக் முடிந்து மெக்சிகோ நாட்டின் பக்கம் போகக்கூடிய கதவுகள் திறந்ததும் உள்ளே செல்லலாமா.

கொஞ்சம் திரில்,ரொம்பவே ஆரவார மனசோடு அப்பக்கம் சென்றோம். நம்மை வெளியே அனுப்பிவிட்டு உடனே கதவை மூடி விடுகிறார்கள். 

திரும்பிப் பார்த்து அட, நம்மை அடுத்த நாட்டுக்குள் தள்ளி விட்டுவிட்டு அமெரிக்கா தன் கதவைச் சார்த்தி விட்டதே என்று உள்ளூர ஒரு சிறு கலக்கம் தோன்றாமல் இல்லை. சரி,என்ன ஆகப் போகுது,,இதோ போறோம்,சுத்திப் பார்த்து விட்டு நம்ம நாட்டுக்கு போகப்போறோம். அவ்வளவு தானே, என தேற்றிக்கொண்டு நடந்தோம். 

அடுத்தது நடந்தது என்ன? படிக்க ஆசையாக உள்ளதா, விரைவில் இறுதி பாகமான மூன்றாம் பாகம் வருகிறது. காத்திருங்கள்!

-Sheela Ramanan